×

சத்தியமூர்த்திபவனில் கட்சியினர் இடையே ரகளை, அடிதடி, மண்டை உடைப்பு; காங்கிரசில் திடீர் மோதல்: எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி காங். மேலிட பொறுப்பாளரிடம் தீர்மானம் ஒப்படைப்பு

சென்னை: காங்கிரசில் திடீர் மோதல் உருவாகியுள்ளது. சத்தியமூர்த்திபவனில் நேற்றிரவு நடந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை கொடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு திடீரென காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரின் ஆதரவாளர் இருவரை வட்டார தலைவர் பதவியில் இருந்து நீக்க கோரி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் நேற்று சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டனர். ஏராளமானோர் திரண்டு வந்திருந்ததால் அங்கு நேற்றைய தினம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த சூழ்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் அமைதியாகினர். அதை தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் ரூபி மனோகரிடம், கே.எஸ்.அழகிரி இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், வீட்டுக்கு புறப்பட்ட கே.எஸ்.அழகிரியின் காரை முற்றுகையிட்டு மறித்தனர். அதோடு நுழைவாயில் கேட்டை அடைத்தனர். இதனால் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். அழகிரியும் காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு அங்கு மேலும் மோதல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்ந சூழ்நிலையில், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பிரிவு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்திபவனில் நடைபெறுவதாக இருந்தது. அந்தக்கூட்டம் இன்று மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி 60க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த தீர்மானம் மீது இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பப்படுமா என்பது அப்போதுதான் தெரியவரும். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, சத்தியமூர்த்திபவனில் எங்களது தரப்பு நியாயத்தை கேட்டுத் தான் போராடினோம். ஆனால் குண்டர்களை வைத்து எங்களை தாக்கிய கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரூபி மனோகரனின் ஆதரவாளரும், தாக்குதலில் காயமடைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜோஸ்வா கூறியுள்ளார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர்கள் நேற்றிரவு, நடைபயணத்தில் இருக்கும் ராகுல்காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் குறித்து கேள்விபட்டு தமிழக காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருதரப்பும் மோதல் குறித்த தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மோதல் தொடர்பாக உண்மை நிலவரத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஒரு குழுவை நியமிக்க  உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Sathyamurthi ,Bhavan ,Congress ,MLA , Rallies, beatings, skull fractures between party members at Sathyamurthi Bhavan; Sudden clash in Congress: Congress demands action against MLA Referral of decision to higher authority
× RELATED காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ...