×

மாவட்டத்தில் முதன்முறையாக விருதுநகரில் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்: பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு

விருதுநகர்/திருவில்லிப்புத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது. இது குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்:
மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், முதலாவது புத்தக திருவிழாவை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு நாளை (நவ.17) துவக்கி வைக்க உள்ளனர். நவ.17 முதல் நவ.27 வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

நாளைய (நவ.17) துவக்க விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நவ.18 முதல் நவ.27 வரை தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் நடத்தப்படும். மாலை 3 மணி முதல் 4 மணி வரை பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளும், 5 மணி முதல் 6 மணி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

நவ.18ல் டாக்டர் ஆனந்தகுமாரின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, ஈரோடு ஸ்டாலின் குணசேகரன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கருத்துரை நடைபெற உள்ளது. நவ.19ல் மதுரை எம்பி வெங்கடேசன் கருத்துரை, திண்டுக்கல் லியோனி குழுவினர் பட்டிமன்றம். நவ.20ல் சிவகாசி இராமசந்திரன் குழுவினரின் பட்டிமன்றமும் நடைபெறும். நவ.21ல் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, எழுத்தாளர் பவா செல்லத்துரை, நகைச்சுவை நாவலர் மோகன சுந்தரம் கருத்துரை நடைபெறும். நவ.22ல் தனியார் தொலைக்காட்சி ஈரோடு மகேஷ், பாரதி கிருஷ்ணகுமார் கருத்துரை, நவ.23ல் தனியார் தொலைக்காட்சி கோபிநாத், கவிஞர் கவிதா ஜவஹர் கருத்துரை நடைபெறும்.

நவ.24ல் திரைப்பட நடிகர் மல்லூரி, டாக்டர் சுந்தர ஆவுடையப்பன் கருத்துரை, நவ.25ல் கலைமாமணி ஞானசம்பந்தன் கருத்துரை, ஏடிஎஸ்பி மணிவண்ணன் கருத்துரை நடைபெறும்.
நவ.26ல் சொல்வேந்தர் சுகி சிவம் கருத்துரை, தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்புக்குழு உறுப்பினர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கருத்துரை, நவ.27ல் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கருத்துரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருவில்லிபுத்தூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: விருதுநகர் புத்தகத் திருவிழா குறித்து திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் ஆலோசனையின் பேரில், நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

நகராட்சி வளாகத்தில் ரங்கோலி போட்டி நடத்தினர். விருதுநகர் தேசிய புத்தக கண்காட்சியின் சின்னமான சாம்பல் நிற அணிலை, ரங்கோலி கோலப் போட்டியில் பங்கேற்றவர்கள் தத்ரூபமாக வரைந்திருந்தனர். புத்தகம் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், பொம்மைகளின் வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலங்களை போட்டு அசத்தினர். இதேபோல, திருவில்லிபுத்தூர் தாசில்தார் ரங்கசாமி தலைமையில், தாலுகா அலுவலகம் மற்றும் நகர்மன்ற அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இதில், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். தாலுகா அலுவலகத்தில் ரங்கோலி கோலப்போட்டி, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில், யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம் ஆலோசனையின்பேரில், யூனியன் ஆணையாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். தாசில்தார் ரங்கசாமி மற்றும் நகராட்சி கமிஷன் ராஜமாணிக்கம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் மம்சாபுரத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு டூவீலர் பேரணி நடைபெற்றது. இதில், தாசில்தார் ரங்கசாமி, மம்சாபுரம் பேரூராட்சி இஓ உஷா கிரேசி மற்றும் நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Virudhunagar , Book festival in Virudhunagar, various programs, district wide awareness
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...