திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற உடனடி நடவடிக்கை: பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல்:திண்டுக்கல்- திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர். திண்டுக்கல்- திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. அப்போது முறையான வடிகால் வசதி இல்லாமல் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் லேசான மழை பெய்தாலே ரோட்டில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கும்‌. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் அப்பகுதி வழியே செல்லும் வாகனஓட்டிகள் மழைநீரில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனை சரிசெய்ய நெடுஞ்சாலை துறையினர், அந்த நேரத்தில் மட்டும் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் இருந்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் மழை பெய்தால் ரோட்டில் எங்கும் மழைநீர் தேங்க கூடாது என்பதற்காக துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் திண்டுக்கல் நெடுஞ்சாலை துறையினர் திருச்சி ரோட்டில் முறையான வடிகால் அமைத்து தண்ணீர் செல்வதற்கு வழிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழையில் தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து தண்ணீர் செல்லும் வாறுகாலில் மீது விழுந்தது. மேலும் தனியார் நிறுவன வளாகத்தில் தேங்கி நின்ற நீர் ரோட்டிற்கு வந்தது. இதனால் ரோடு முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. இதுபற்றி தகவலறிந்ததும் ஆர்டிஓ பிரேம்குமார், தாசில்தார் சந்தன மேரி கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து தேங்கி நின்ற தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் தனியார் நிறுவன உரிமையாளரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் ரோட்டிற்கு வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Related Stories: