×

வருசநாடு அருகே சின்ன சுருளியில் குளிக்க தடை

வருசநாடு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழையால், தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. அதிலும், சுருளி அருவி, சின்ன சுருளி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தேனி மாவட்டம், மேகமலை - கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்னச்சுருளி அருவிருக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவியானது மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று வருகின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மீறி அருவிக்கு செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும், என்றனர்.

Tags : Varusanadu , Varusanadu, small curls, ban on bathing
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?