20ம்தேதி உலக கோப்பை கால்பந்து போட்டி ெதாடக்கம்: விழாக்கோலம் பூண்ட மீனவ கிராமங்கள்; வீதியெங்கும் வீரர்களின் ஓவியம், கட் அவுட், தோரணங்கள்

நித்திரவிளை: 20ம்தேதி உலக கோப்பை கால்பந்து  போட்டிகள் தாடங்கும் நிலையில் தூத்தூர் மண்டல் மீனவ கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீதியெங்கும் வீரர்களின் ஓவியம், கட் அவுட், தோரணங்கள் அலங்கரிக்கின்றன. உலக கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற 20ம் தேதி  தொடங்குகிறது. இதில் அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுக்கல்,  இங்கிலாந்து, ஸ்பெயின், குரோசியா உட்பட 32 நாட்டு அணிகள் கலந்து  கொள்கின்றன.

இந்த போட்டியை வரவேற்கும் விதமாக குமரி மாவட்டம் தூத்தூர்  மண்டலத்தில் உள்ள 8 மீனவ கிராமங்களிலும் முன்னணி கால்பந்து வீரர்களின் கட்  அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  கிராமங்கள் தோறும் போட்டியில்  கலந்து கொள்ளும் முன்னணி நாடுகளின் கொடி, தோரணங்கள் கட்டி  தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளன.

இது குறித்து தூத்தூர் நேதாஜி படிப்பகத்தின் விளையாட்டு பிரிவு செயலாளர் கிறிஸ்டின்  பர்ணபாஸ் கூறியதாவது:

 தூத்தூர்  மண்டல மீனவர்கள் மற்றும் கேரள கடற்கரை மீனவர்களும் கால்பந்து  விளையாட்டை  அதிகமாக விரும்புவார்கள். 6 வயதிலேயே  பிள்ளைகள் மைதானத்தில் வந்து  கால்பந்து விளையாடுவார்கள். கால்பந்து போட்டியை பொறுத்தவரையில் ஒரு அணியில்  11 பேர் விளையாடுவார்கள். எங்கள் மீனவ கிராமங்களில் விளையாட்டு வீரர்களின்  வேகத்தை அதிகரிக்கவும், திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டி மைதானத்தின் அளவை   சிறிதாக்கி ஒரு அணியில் 9, 7, 5 என்ற அளவில் எண்ணிக்கையை  குறைத்து    விளையாட்டு போட்டிகளை தினமும் நடத்துவோம்.

மாநிலங்களுக்கிடையே  நடக்கும் சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் தூத்தூர் மண்டலத்தில்  இருந்து ஆன்டனி சேவியர், ததேயுஸ், ஷாஜி, லியோன்ஸ் பிரிட்டோ, ஜோபின்,  டயர்பின் பங்கேற்றுள்ளனர். இந்திய  அளவில் நடைபெறும் இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டியில்  ரீகன்,  மைக்கிள் ரெஜின், லிஜோ பிரான்சிஸ், விஜய், ரெஜீவன், பியுட்டன், ப்ரீடீசன்  பங்கேற்றுள்ளனர்.  ஆசிய போட்டியில் சூசைராஜ் மேலும் பல்கலை அளவிலான போட்டியில் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். வரும் 20ம் தேதி உலக கால்பந்து போட்டியை  தூத்தூர் மண்டலத்தில் உள்ள 8 மீனவ  கிராமங்களிலும் தனித்தனியாக புரெஜெக்டர் மூலம் ஸ்கிரீனில்  லைவ்வாக  ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு முழுவதும் உட்கார்ந்து  பார்ப்போம்.

எந்த நாட்டு  ரசிகர்களோ  அந்த நாட்டு பனியனை ரசிகர்கள்  அணிந்திருப்பார்கள். உலக கோப்பை கால்பந்து போட்டிகள் முடியும் வரை தினமும்  தூத்தூர் மண்டல மீனவ கிராமங்கள் இரவு வேளையில் விழா கோலம் பூண்ட நிலையில் காணப்படும். எங்கள் ஊரில் உள்ள பயஸ் லெவன்த் மேல்நிலைப்பள்ளியில் மைதானம்  உள்ளது. அதை சீரமைப்பு செய்து மின்விளக்குகள் ஏற்பாடு செய்து தந்தால்  தூத்தூர் மண்டலத்தை சார்ந்த மாணவர்கள் அதிகம் பேர் தேசியஅணியில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Related Stories: