×

கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் 3 யானைகள் முகாம்: வனத்துறையினர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே 3 யானைகள் முகாமிட்டுள்ளதையடுத்து, பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி, பனகமுட்லு கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த 12 நாட்களாக 3 யானைகள் முகாமிட்டிருந்தன. பின்னர் அந்த யானைகள் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதிக்கு இடமாறி, அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, வனத்துறையினர் யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தும்  யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு 3 யானைகளும் குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கூசுமலை பகுதியில் உள்ள பையனப்பள்ளி, ஜாகீர்மோட்டூர் பகுதியில் உள்ள நெற்பயிர்களை தின்றும், மதித்தும் நாசம் செய்தன.

நேற்று விடியற்காலை அந்த யானைகள் ஜாகீர்மோட்டூர் பகுதியில் இருந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு வந்து, அங்கு முகாமிட்டுள்ளது. இதையடுத்து யானைகள் கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினருடன், போலீசாரும் ரோந்து வாகனங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மக்கள் வசிக்கும் பகுதியில் யானைகள் உள்ளன. ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறுபக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானைகள் அலைந்து கொண்டுள்ளது. இரவில் யானைகளை விரட்ட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் இப்பகுதியை சுற்றி இரவு நேரத்தில் செல்ல வேண்டாம் என்றனர்.


Tags : Krishnagiri , Krishnagiri Tollgate, 3 Elephant Camp, Forest Department alert
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்