×

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த ஏவுகணை போலந்து நாட்டில் விழுந்து 2 பேர் பலி.. போலந்து அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு..!!

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த ஏவுகணை போலந்து நாட்டில் விழுந்து வெடித்ததில் 2 பேர் உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9வது மாதமாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கெர்சன் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், நேற்று கடும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில், உக்ரைன் - போலந்து எல்லை பகுதியில் உள்ள பெர்ஸ்வுடோ கிராமத்தில் ஏவுகணை விழுந்து வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். போலந்து குடிமக்கள் 2 பேர் கொல்லப்பட்டதை அடுத்து ரஷ்ய தூதருக்கு போலந்து வெளியுறவு அமைச்சர் சம்மன் அனுப்பியுள்ளார். இதனிடையே, ரஷ்ய ஏவுகணைகள் போலந்து பிரதேசத்தை தாக்கியதாக வெளியான செய்திகளை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. நிலைமையை மோசமாக்கும் நோக்கில் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

போலந்து அதிபருடன் ஜோ பைடன் பேச்சு

ரஷ்ய ஏவுகணை போலந்தில் விழுந்து 2 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டு அதிபர் துவாவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏவுகணை விழுந்து 2 பேர் கொல்லப்பட்டதற்கு போலந்து அதிபரிடம் அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார். ஏவுகணை விபத்து தொடர்பாக போலந்து நாடு நடத்தும் விசாரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு தரும் என பைடன் உறுதி அளித்தார்.

நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் அவசர ஆலோசனை

போலந்தில் ரஷ்ய ஏவுகணைகள் விழுந்தது பற்றி ஜி7, நேட்டோ தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷ்ய ஏவுகணைகள் விழுந்து 2 பேர் இறந்தது பற்றி இந்தோனேஷியாவின் பாலி நகரில் பைடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Russia ,Ukraine ,Poland ,US ,President ,Joe Biden , Ukraine, Russia, Missile, Killed, Joe Biden
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...