×

ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி வருவாயை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை; போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுறுத்துதலின்படி செப்டம்பர் 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில் பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது. எனவே, மா.போ.கழக அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கீழ்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

* மா.போ.கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி *நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் /சாலைகளில் பேருந்துகளை இயக்க கூடாது.

* அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கி செல்லுதல் வேண்டும்.

* மா.போ.கழக பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி /இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

* மா.போ.கழகத்தில், சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும்.

* குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டங்களை வசூலித்தல் கூடாது. மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும்.

* ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக்கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும். மாறாக பணியின்போது வீண்வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.

* பேருந்துகளின் சிறிய, பெரிய பழுதுகளை ஒவ்வொரு நாளும் இரவில் சரிசெய்து மறுநாள் காலையில் அதனதன் வழித்தடத்தில் அட்டவணைப்படி முறையாக இயக்கிடல் வேண்டும்.

* கால் ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தினை எத்தகைய விபத்திலும் குறிப்பாக உயிரிழப்பு விபத்து ஏற்படாவண்ணம் தானியங்கி மூடு கதவினை ஒவ்வொரு நிறுத்தத்திலும் சரியாக திறந்து/மூடி பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்குதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை துணை மேலாளர்(பயிற்சி/பாதுகாப்பு) மற்றும் முதல்வர் பயிற்சி பள்ளி ஆகியோர் பயிற்சிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நன்கு விளக்கி கூறி கடைபிடிக்க செய்ய வேண்டும்.
மேலும், அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் மண்டல மேலாளர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை ஓட்டுநர்/ நடத்துநர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் நன்கு விளக்கி கூறி மா.போ.கழகத்தின் பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயணச்சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாயினை பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Drivers, conductors should treat passengers with respect and courtesy: Transport Department directive
× RELATED ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு