×

பால், மின் கட்டண உயர்வை கண்டித்து 16 இடங்களில் பாஜ ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து 16 இடங்களில் பாஜவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் சிட்லபாக்கம் பகுதியிலும், மண்டல தலைவர் கணேஷ் தலைமையில் தாம்பரம் பகுதியிலும், வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் தலைமையில் பம்மல் பகுதி மற்றும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், பல்லாவரம், பொழிச்சலூர், திருநீர்மலை, பரங்கிமலை என 16 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், மாவட்ட தலைவர் வேத சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வினால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, அவற்றை அரசு திரும்ப பெற வேண்டும். தாம்பரம் மாநகராட்சி குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு புகார்கள் அளித்து வருகின்றனர். குறிப்பாக, ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் சரிவர நடப்பதில்லை, அதிக சதவீதத்தில் கமிஷன் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பணிகள் ஒதுக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தரமற்ற முறையில் பணிகளை செய்து வருகின்றனர். மேலும், தரமற்ற முறையில் கால்வாய் பணி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காமல், இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அலட்சியமாக செயல்பட்டு வரும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : BJP , Pal, electricity tariff hike, 16 seat, BJP protest
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...