×

வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் 2 மருத்துவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 மருத்துவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  நேற்று காலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின் குடும்பத்தினரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதித்ததால் ரத்த நாளங்கள் பழுதாகி உள்ளது. மேல் சிகிச்சைக்காக 10ம் தேதி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். 14ம் தேதி நேரடியாக வந்து பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் எலும்பு சிகிச்சை நிபுணர், மூட்டு நிபுணர், மயக்கவியல் மருத்துவர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்தபோதும் நேற்று காலை மாணவி பிரியா உயிரிழந்தார்.

மாணவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்தபோது, காயம் மேலும் அதிகரித்திருப்பதும், தசை வளர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழந்து, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார். அதனால் இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது.

மாணவி பிரியா முதலில்  ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தபோது வீடு அருகில் என்பதால் பெரியார் நகர் மருத்துவமனைக்கு மாற்றினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.  மேலும் 2 மருத்துவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும். துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும். மருத்துவர் குழு விசாரணையும் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Priya ,Minister ,M. Subramanian , Veteran, Death, 2 Doctors, Police Action, Minister M. Subramanian, Information
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...