நெட்டுகுப்பம் மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

திருவொற்றியூர்: எண்ணூர் நெட்டுகுப்பத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எண்ணூர் நெட்டுகுப்பத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி பல நாட்களாக பழுதடைந்து காணப்பட்டது. இதனால், மழை காலத்தில் கசிவு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து, கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் செலவில் பள்ளி வகுப்பறை மற்றும் சமையல் கூடத்தை சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர் சிவக்குமார் மாநகராட்சியில் தீர்மானம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், கட்டிடம் இடிந்து விழக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி பள்ளி வராண்டாவில் மாணவ, மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமை ஆசிரியர் லெஸ்லின் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்து அவரது அறையை திறந்தார். அப்போது, அந்த அறையின் சிமென்ட் பூச்சு மின் விசிறியோடு பெயர்ந்து கீழே விழுந்து கிடந்தது. அவரது மேஜை, நாற்காலி முழுவதும் ரப்பீஸ் சிதறி கிடந்தது. இதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுப்பாமல் தடுத்து நிறுத்தினர். இதை கேள்விப்பட்டு மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

மேலும், கவுன்சிலர் சிவகுமார் மாநகராட்சி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். உடனே, மண்டல உதவி ஆணையர் சங்கரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உள்ளிட்டோரும் விரைந்து வந்தனர். மாணவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வகுப்பு நடத்தவும், பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய வகுப்பறை கட்டவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: