அண்ணா பல்கலை வளாகத்தில் ஆர்கானிக் விவசாயம்: 5 ஏக்கரில் பயிரிட்டுள்ள மாணவர்கள்: பல்கலை பதிவாளர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை கழக வளாகத்தில், 5 ஏக்கரில் ஆர்கானிக் விவசாயத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அண்ணா பல்கலை பதிவாளர் ரவி தெரிவித்தார். இது குறித்து அண்ணா பல்கலை கழக பதிவாளர் ரவி கூறியதாவது: படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களுக்கு விவசாயத்தை கற்று கொடுப்பதில் பல்கலை கழகம் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. விவசாயத்தினை மீட்டெடுக்க இளைஞர்களால் மட்டும்தான் முடியும். எனவே, இங்கு 5 ஏக்கர் நிலம் ஆர்கானிக் விவசாயத்துக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் பல்கலை கழக மாணவர்கள் ஆர்வத்துடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதனை கண்காணிக்க துணை பேராசிரியர் ராம்ஜி, இயக்குநர் மாதவி கணேசன், தொழிற்முறை உதவியாளர் மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுள்ளனர்.

கடந்த காலத்தில் வேலை என்றாலே விவசாயம் என்று நிலையே காணப்பட்டது. ஆனால் இப்போது தலைமுறையினர் ஐடி துறையில் கவனம் செலுத்தி, விவசாயத்தை கைவிட்டனர். அதனால் விவசாய வளர்ச்சி எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டது. செல்போனின் வளர்ச்சி பத்து ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது அதன் வளர்ச்சி உலகையே ஆட்டி படைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஆனால் பழமை வாழ்ந்த விவசாயத்தின் நிலை எப்படி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. இஸ்ரேலும் விவசாயமும்:  என் அப்பா மண்வெட்டி பயன்படுத்தி விவசாயம் செய்தார்,  அதையே தான் நான் செய்கிறேன். விவசாயம் பொய்த்து போனதற்கு தண்ணீர் இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

தண்ணீர் பிரச்னையை தீர்க்க டெக்னாலஜி அவசியம். உதாரணத்துக்கு இஸ்ரேலை எடுத்து கொள்ளலாம், அது ஒரு பாலைவன நாடு. குடிநீருக்கு கூட நீரை பூமியின் அடிமட்டம் வரை போய் எடுக்க வேண்டும். அந்த நாடுதான் தற்போது இயற்கை விவசாயத்தில் முதலில் உள்ளது. காரணம் அவர்கள் 70% தண்ணீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துகின்றனர். எந்த தாவரத்திற்கு எந்த அளவில் நீர் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக அளவிட்டு கொடுக்கின்றனர். அந்த அளவிற்கான டெக்னாலஜி அவர்களிடம் உள்ளது. நம் மாநிலம் அந்த அளவிற்கு வறண்ட பூமி கிடையாது. கிடைக்கும் நீரை சேமித்து எவ்வாறு பயன்படுத்துவது என்ற சரியான திட்டமிடல் மட்டுமே நமக்கு வேண்டும்.

இன்ஜினியரிங்கும் விவசாயமும்: நம் பெற்றோர்களை போல நம்மால் நிச்சயம் விவசாயத்தை சிறப்பாக மேற்கொள்ள முடியாது. அவர்கள் உடலில் இருந்த வலிமை நம்மிடம் இல்லை. அவர்கள் காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வார்கள். காரணம் உணவு பழக்க வழக்கங்கள். நம்மால் ஒருமணி நேரம் கூட மண்வெட்டி பிடித்து வேலை செய்ய முடியாது. ஆனால், சரியான டெக்னாலஜியை பயன்படுத்தினால், விவசாயம் சாத்தியம்தான். அதை ஒரு இன்ஜினியரால் செய்ய தான் முடியும். அண்ணா பல்கலை கழக மாணவர்களுக்கு இதில் நிறைய ஆர்வம் உள்ளது. காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னால் ஒரு மணி நேரமும், மாலை வகுப்புகள் முடிந்த பின்னர் ஒரு மணி நேரமும் இங்கு வந்து வேலை செய்வார்கள்.

பட்டங்களை பெற்ற பின்னர் ஒரு பணியை தைரியமாக மேற்கொள்ள இந்த களப்பணி அவர்களுக்கு உதவியாக இருக்கும். விவசாயத்தின் மீதே அவர்கள் ஆர்வம் இருந்தால் கற்றுக்கொண்ட இன்ஜினியரிங்கும் விவசாயமும் அவர்களுக்கு கைகொடுக்கும். சரியான திட்டமிடல் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் சிறப்பாக பயணிக்கலாம். இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் விடுதிகளில் உள்ள மாணவர்களின் உணவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் வளாகத்தில் உள்ளவர்களேஆர்கானிக் காய்கறிகள் என அனைத்தையும் வாங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு இதனை போட்டிபோட்டு வாங்கி செல்வார்கள். தற்போது இதில் 200 மரங்கள், கீரை வகைகள், எள்ளு என பல வகையான இயற்கை வகைகள்  பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பல்கலை கழக மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளி நபர்களும் வந்து களப்பணிகள் மேற்கொள்ளலாம். அக்ரி மாணவர்களுக்கு இறுதியாண்டு புராஜெக்ட் முடிக்க வேண்டுமென்றாலும் இங்கு வந்து தங்களுடைய வேலைகளை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: