மைசூருக்கு 1966ல் எடுத்துச்செல்லப்பட்ட 20,000 தமிழ் கல்வெட்டுகள் சென்னை வந்தது: நீதிமன்ற உத்தரவு அமல்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையிடம் உள்ளது. சென்னை அலுவலகத்தில் இருந்த தமிழக கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், உதகமண்டலத்துக்கு மாற்றப்பட்டன. அங்கிருந்து 1966ம் ஆண்டு மைசூருக்கு தமிழ் கல்வெட்டுகள் எடுத்துச்செல்லப்பட்டன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பலரும் குற்றம்சாட்டிவந்தனர்.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ்மொழி தொடர்பான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் ஆணைப்படி, தமிழ் கல்வெட்டுகளின் முதல் பகுதி, சுமார் 20,000 கல்வெட்டு படிகள் மைசூர் மத்திய கல்வெட்டு துறையிலிருந்து சென்னைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

அதன்படி, சென்னை, எழும்பூரில் உள்ள மத்திய தமிழ் கல்வெட்டு அலுவலகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்டகால போராட்டத்திற்கு பின் கல்வெட்டுகள் சென்னை வந்ததையடுத்து சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும், 65 ஆயிரம் கல்வெட்டு படிகள் தமிழில் உள்ளன. அவைகளிலிருந்து தான் தற்போது சென்னைக்கு முதற்கட்டமாக 20,000 ஆயிரம் கல்வெட்டு படிகள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: