குஜராத் சட்டமன்ற தேர்தலில் பழைய சாதனையை பாஜ முறியடிக்கும்: அமித்ஷா திட்டவட்டம்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் இதற்கு முன் உள்ள சாதனைகளை பாஜ முறியடித்து, அதிக தொகுதி, வாக்குகளை கைப்பற்றும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பிரசாரம் செய்தார். காந்திநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சனாந்த் சட்டமன்ற தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருந்தவர் கனுபாய் படேல். இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கனுபாய் படேல், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, அமித்ஷா அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடி தலைமையில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். சட்டம் ஒழுங்கு வலுப்படுத்தப்பட்டு உள்ளது. பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் குஜராத் பாஜ இதற்கு முன் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். பாஜ எப்போதும் இல்லாத வகையில் அதிக தொகுதிகளையும், வாக்குகளும் பெற்று ஆட்சி அமைக்கும்,” என்றார்.

Related Stories: