×

நிலுவை தொகை வழங்காவிட்டால் ஜிஎஸ்டி தருவதை நிறுத்தி விடுவோம்: ஒன்றிய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

ஜர்கிராம்: மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை வழங்காவிட்டால், ஒன்றிய அரசுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்த நேரிடும்,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். ஜிஎஸ்டி வசூலில் இருந்து கிடைக்கும் தொகையை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பிரித்து அளிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த தொகையை மாநிலங்களுக்கு அது வழங்குவது இல்லை. இதனால், மாநில அரசுகள் தங்களுடைய நலத் திட்டங்கள், மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்த முடியாமல் தவிக்கின்றன. இந்த தொகையை பெறுவதற்காக மாநில அரசுகள் ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசிடம் மன்றாட வேண்டியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கம் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். நமது மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை பெறுவதற்கு ஒன்றிய அரசின் முன் மடியேந்த வேண்டுமா? நிலுவை தொகையை ஒன்றிய அரசு வழங்காவிட்டால், ஆட்சியில் இருந்து விலக வேண்டும். மேலும், ஜிஎஸ்டி செலுத்துவதை மாநில அரசு நிறுத்த நேரிடும்,’ என எச்சரித்தார்.


Tags : Mamata ,Union Govt , Dues, GST, Union Govt, Mamata, Warning
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்