எஸ்டி சான்றிதழ் கோரி ஐகோர்ட் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரித்த வழக்கு முடித்துவைப்பு

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என்ற தமிழக அரசு விளக்கத்தை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில்,  பட்டியலினத்தை சேர்ந்த வேல்முருகன் பழங்குடியினர் சான்றிதழ் கோரி செப்டம்பர் 20ம் தேதி அளித்த விண்ணப்பத்தில் செப்டம்பர் 23ம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் செப்டம்பர் 26ம் தேதி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதிகள், நீதிமன்ற வளாகத்திற்குள் தற்கொலை சம்பவம் நடந்ததால் தனது கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்பதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தோம். வேல்முருகனும், அவரது தந்தையும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அவரது மகனுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்து  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: