×

ராக்கிங் கலாசாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் ஆணையர்கள், எஸ்.பிக்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்  அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள்,  ராக்கிங் மற்றும் அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற ராக்கிங் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் பெறப்பட்டது. சட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில்  உள்ள கல்வி நிறுவனங்களில் ராக்கிங் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணையில் ராகவன் கமிட்டியின் பல பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டும் என்று தாமதம் செய்தால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ராக்கிங்கில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது பெற்றோர் பாதுகாவலரை நேரடியாக காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய விரும்பினால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனத்தால் மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலாமாண்டு மற்றும் சீனியர் மாணவர்களிடையே இணக்கம் ஏற்படும் விழிப்புணர்வு நிகழ்வுகள் கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட வேண்டும்.இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். சட்டக்கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது. வழக்குகள் கோப்பில் எடுக்கப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி உடனடியாக கோப்புக்கு எடுக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும், ராக்கிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையவழி காவல் உதவி, இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும் புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராக்கிங்கில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணைபுரிந்து விடவோ கூடாது என்ற உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும்.


Tags : SPs ,DGP ,Sailendrababu , Police commissioners, SPs must take strict action to curb rocking culture: DGP Sailendrababu
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...