திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 27ம் தேதி கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிச.6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் பா.முருகேஷ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், தீபத்திருவிழாவில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே, அதற்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்றார்.

* மகாதீப மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி

தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகளில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும். மேலும், 12,400 கார்களை நிறுத்தும் இட வசதியுடன் 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி. 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடைகள் இயக்கப்படும். கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் ஆயிரம் மாணவர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுவார்கள். கோயில் பிரகாரங்களில் 169 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப்பாதையில் 9 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு, 4 கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்கப்படும். முக்கிய இடங்களில் 57 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது, இந்த ஆண்டு 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.

Related Stories: