×

சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கேமரா: ‘பறந்து’ சென்றால் ஃபைன் கட்டணும்; இரவிலும் துல்லியமாக கண்காணிக்கும்

விருதுநகர்: சமயநல்லூர் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க, ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் வைபவ் மிட்டல் தலைமை வகித்தார்.  கேமரா கட்டுப்பாட்டு அறையை விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணியும், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் மீட்டர் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்தது. கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதுகுறித்து நான்குவழிச்சாலை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி வரை 248 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர், சாத்தூர், கயத்தாறு, நாங்குநேரி ஆகிய 4 இடங்களில் டோல்கேட்டுகள் உள்ளன. இந்த சாலையில் ரூ.80 கோடி செலவில் பகல், இரவு மற்றும் மழைக்காலங்களிலும் வாகனங்களை துல்லியமாக கண்காணிக்கக் கூடிய 591 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 5 கி.மீ தூரத்திற்கு ஒன்று என்ற அளவில், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் 210 மீட்டர்களும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் செல்லும் வாகனங்களையும் கூட அதிநவீன கேமராக்கள் துல்லியமாக அடையாளம் காட்டும். கேமராக்களில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி மூலம் விபத்து, கொலை, கொள்ளை குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச் செல்வாரை எளிதாக கண்டறியலாம். அதிக வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதியும் உள்ளது’’ என்றனர்.

Tags : Samayanallur ,Kanyakumari National Highway , 591 state-of-the-art cameras on Samayanallur-Kanyakumari National Highway at a cost of Rs.80 crore: fine if you go 'flying'; Accurate tracking even at night
× RELATED மதுரை மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுக்கு...