உயர்கல்வி தொடர இயலாத 777 மாணவ - மாணவியரை கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத 777 மாணவ-மாணவியரை கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை முன்னெடுத்துள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2021-2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு முடித்து 2022-2023ம் ஆண்டில் 777 மாணவ மாணவியர் உயர்கல்வியை தொடரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் குடும்ப நிதி நிலை, விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமை, என பல்வேறு காரணங்களால் கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தற்போது 18ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேற்கண்ட 777 பேரை கல்லூரிகளில் சேர்க்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்படி, 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனைத்து கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்க வேண்டும். உயர்கல்வியை தொடராத மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேசி, கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்க வேண்டும். உதவி மையங்களுக்கு வரும் மாணவர்களிடம் சேர்க்கை தொடர்பான விவரங்களை கேட்டு, பின் அந்த கல்லூரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த படிப்புக்கான காலியிடம் உள்ளதா என்று அதிகாரிகள் கேட்டறிய வேண்டும். இடம் இருந்தால் சம்மந்தப்பட்ட உயர்கல்வி மண்டல இணை இயக்குநர்களிடம் தெரிவித்து அந்த மாணவர்களுக்கு அந்த பாடப் பிரிவை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பின்னர் அந்த மாணவர்களை அந்த கல்லூரிக்கு அனுப்பி கல்லூரியில் சேரச் செய்தல் வேண்டும். அந்த மாணவர்கள் தங்கள் சொந்த நிதியில் கல்வி கட்டணம் செலுத்தும் பட்சத்தில் தாமாகவே கல்லூரியில் சேரலாம். நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கை நடந்த பிறகு 2 வார கால அவகாசத்துக்குள் கல்வி கட்டணம் செலுத்த மாவட்ட ஆட்சியர் உதவியுடன் ஸ்பான்சர்ஷிப் பெற்றுத் தரப்பட வேண்டும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவு காலியிடம் இல்லாத பட்சத்தில் முதன்மைக் கருத்தாளர்கள்  தக்க ஆலோசனை  வழங்கி பிற பாடப் பிரிவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மாநில திட்ட இயக்குநர் சுதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: