அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு எடப்பாடியை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்: ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்த முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் ஒப்புதல் பெறுவதற்காக ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று 2020ல் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் ராமநாதபுரம் உள்பட 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி கட்ட வேண்டும். ஆனால், இந்த மருத்துவ கட்டிடங்கள் கட்டியதில் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 77 ஆயிரத்து 482 சதுர அடி கட்டிடம் கட்டவில்லை. இதன்மூலம் ரூ.52 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கிருஷ்ணகிரியில் மருத்துவமனைக்கு கட்டப்பட வேண்டிய 5050 சதுர அடி கட்டவில்லை. கள்ளக்குறிச்சியில் 11,23, 510 சதுர அடி கட்டுமான பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் 10,32,213 சதுர அடிக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. இதுபோல மற்ற மருத்துவ கல்லூரிகளிலும் கட்டுமானப் பணியில் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கூட்டுச்சதி செய்து  கோடிக்கணக்கான தொகையை மோசடி செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டிடம்) ராஜ்மோகன், சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.கே.வார்ட்ஸ் ஆகியோருக்கு இந்த ஊழலில் பெரும் பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம்  கடந்த 2021 ஜூலை 7ம் தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் புகார் கொடுத்தேன். அதன் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர்  அசன்முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில்  ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது. அரசின் ஒப்புதலுக்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, தமிழக போலீசாரே விசாரிக்க தயாராக உள்ள நிலையில் சிபிஐ விசாரணை எதற்கு கேட்க வேண்டும் என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர், விசாரணையை வருகிற டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: