×

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜ எம்எல்ஏக்கள் சந்திப்பு: தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று பாஜ எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது பாஜ எம்எல்ஏக்கள் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் அளித்தனர்.  

சந்திப்புக்கு பின்னர் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி: பாஜவின் மாநில மையக்குழு எடுத்த முடிவின்படி முதல்வரை நாங்கள் சந்தித்தோம். இந்த சந்திப்பின்போது தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்தோம். அதோடு, மண்டைக்காடு மதக்கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய வேணுகோபால் கமிஷனின் அறிக்கையை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளோம். நெல்லை மானூர் குளத்துக்கு கோரையாற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும், நெல்லையப்பர் கோயிலுக்கு ரதவீதியைச் சுற்றி நிலத்தடியில் கேபிள் அமைத்து தேர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதுமே எதிர்காலத்தில் மத மோதல்கள் ஏற்படாமல் இருப்பதற்கு, வேணுகோபால் கமிஷனின் பரிந்துரையை அரசு ஏற்று அதை அரசாணையாக வெளியிட்டு சட்டமாக கொண்டு வர வேண்டும். அரசு நிலங்கள், அறநிலையத்துறை நிலங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அதில் நடவடிக்கை எடுக்கும்படி கோரினோம். முதல்வர் முழுமையாக அவற்றை கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரா வித்தியாலயா கொண்டு வர வேண்டும். நிலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதை விரைவாக அமைத்துத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : BJP ,Chief Minister ,M.K.Stalin ,Chennai Chief Secretariat , BJP MLAs meeting with Chief Minister M.K.Stalin at Chennai Chief Secretariat: Constituency-wise petitions were presented
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...