×

டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதை 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வடகிழக்குப் பருவமழை மற்றும் இதர காரணங்களால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பை வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேற்று(நேற்று முன்தினம்) நேரில் சென்று ஆய்வு செய்தேன். செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்பு (சம்பா,தாளடி, பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்களால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களால் அவர்கள், ஏற்கெனவே பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15ம் தேதி(நேற்று) என்ற கால வரம்பினை, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்குமாறு மேற்படி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களால், தஞ்சாவூர் (I&II), நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் (I &II), கடலூர், புதுக்கோட்டை (I &II), மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் (I&II), தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தர்மபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் (சம்பா,தாளடி, பிசானம்) சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை 15ம் தேதியில்(நேற்று) இருந்து, வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Delta ,Chief Minister ,M.K.Stal ,Union Minister , Delta district farmers should extend crop insurance till 30th: CM M.K.Stal's letter to Union Minister
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...