×

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வலதுகால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மருத்துவமனையில் போலீசார் குவிப்பு; மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலதுகால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா நேற்று  சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மருத்துவமனையில் உறவினர்கள், மாணவர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை வியாசர்பாடி எம்எம் கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்கு லாரன்ஸ், வசந்த், விஜயன் என்ற 3 மகன்கள். மகள் சாந்த பிரியா (17). இவர், சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கால்பந்து விளையாட்டு வீராங்கனையான இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலது கால் முட்டியில் அடிபட்டுள்ளது. வீட்டில் சொன்னால் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் சொல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு மீண்டும் காலில் வலி அதிகமானதால் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும்’’ என்று கூறி, கடந்த 7ம் தேதி காலை 10 மணிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சை முடிந்து வெளியே கொண்டுவரும்போது வலது கால் முழுவதும் கட்டுப்போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கால்வலி அதிகமாக இருப்பதாக டாக்டர்களிடம் பிரியா கூறியுள்ளார். அதற்கு டாக்டர்கள், ‘’ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதால் வீக்கமும் வலியும் அதிகமாக உள்ளது. எனவே, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லுங்கள்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 8ம் தேதி மாலை 4 மணி அளவில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரியா சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது மருத்துவர்கள் ரத்த ஓட்டத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது கால் முழுவதும் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று பரவி உள்ளது. உடனடியாக காலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேறு வழியின்றி காலை அகற்ற சம்மதித்தனர். இதன்பிறகு வலது கால் முழுவதையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர்.

இந்நிலையில், பிரியாவுக்கு தவறான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ததால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே வீராங்கனை பிரியாவுக்கு காயம் மேலும் அதிகரித்து ரத்த ஓட்டம் மிகவும் பாதிப்படைந்தது. ரத்த அழுத்தம் குறைந்து டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றதுடன் சிறுநீரகம் செயலிழந்து அதன் தொடர்ச்சியாக ரத்த ஓட்டம் இல்லாமல் உறுப்புகள் செயலிழந்தன. தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு பிரியா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதனால் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து, மருத்துவமனை முன் குவிந்தனர்.

பிரியாவின் சாவுக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. அவர்களை டாக்டர்கள் சமாதானப்படுத்தினர். இதனிடையே பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், அவரது உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, பிரியா மரணம் அடைந்த செய்தி கேட்டு, அவரது உறவினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, பிரியாவின் உடலை வீட்டுக்கு அனுப்ப மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், ‘‘பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை கைது செய்யவேண்டும்’’ என கோஷமிட்டு போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு பிரியாவின் உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம்: பிரியாவின் உடல் நேற்று மாலை 4 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பேத்கர் கல்லூரி சாலை, பட்டாளம், ஓட்டேரி,  அயனாவரம் பகுதி வழியாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கிறிஸ்தவ கல்லரை தோட்டத்தில் மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

கிறிஸ்தவ முறைப்படி நடந்த இறுதிச்சடங்கில் அவரது ஜெர்சி ஆடை, அவர் பயன்படுத்திய கால்பந்து, விளையாட்டுக்கு பயன்படுத்திய பூட்ஸ் ஆகியவற்றை சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்தனர். நிகழ்ச்சியில், பிரியாவுடன்  கல்லூரியில் படித்த மாணவ, மாணவியர், கால்பந்து வீரர்கள், உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க பிரியாவின் வீடு உள்ள இடத்தில்  இருந்து கல்லறை தோட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* உறவினர்கள் குமுறல்
பிரியா தந்தை ரவி கூலி வேலை செய்து வருகிறார். இதனால் இவரது குடும்பம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளது. இச்சூழ்நிலையில்தான் வீராங்கனை பிரியா, படிப்படியாக வளர்ந்து கால்பந்தாட்டத்தில் சாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் உழைத்துள்ளார். அவர் தினமும் பல மணி நேரம் கடும் பயிற்சி செய்துள்ளார். எப்படியாவது ஒரு நல்லநிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் இறந்துவிட்டார். அவரது கனவு முழுவதும் தகர்ந்துவிட்டது.

* நம்பிக்கையுடன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த பிரியா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு ஸ்டேட்டஸில் நம்பிக்கையுடன் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், எனது நண்பர்களுக்கும் எனது உறவினர்களுக்கும் என்று குறிப்பிட்டு, நான் சீக்கிரமே கம்பேக் கொடுப்பேன். எதற்கும் கவலைப்படாதீர்கள். எனது விளையாட்டு, என்னை விட்டு போகாது, நான் மீண்டு வருவேன். நீங்கள் நம்பிக்கையாக இருங்கள். லவ் யூ ப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிஸ் என போட்டிருந்தார். அவர் போட்ட பதிவினை அவரது நண்பர்கள் நிறைய பேர் நேற்று தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* சந்தேக மரணம் என வழக்குப்பதிவு
பெரவள்ளூர் காவல்நிலையத்தில் பிரியாவின் தந்தை ரவி கொடுத்துள்ள புகாரில், ‘‘தனது மகள் பிரியாவிற்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனை சார்பில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. எனவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், 174வது பிரிவின் கீழ் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சம்பந்தமாக பெரவள்ளூர் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதனிடையே கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில் பிரியா உயிரிழந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள் மற்றும் அவருடன் படித்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று கொளத்தூர் துணை போலீஸ் கமிஷனர் ராஜாராம், பெரவள்ளூர் உதவி கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

* 6ம் வகுப்பு முதல் கல்லூரி வரை...
பிரியாவின் அண்ணன்கள் விஜய். வசந்த். இருவரும் கால்பந்தாட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். எனவே, தனது தங்கையையும் கால்பந்து வீராங்கனை ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரியா 6வது படிக்கும்போதே கால்பந்து அணியில் சேர்த்து பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர். வார இறுதி நாட்களில் தனது அண்ணன்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பிரியா கால்பந்து விளையாட்டு பயிற்சி பெற்று வந்துள்ளார். பிரியாவின் கால்பந்தாட்ட திறனை பார்த்து பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் தொடர்ந்து பிரியாவிற்கு கால்பந்து ஆட பயிற்சி அளித்து வந்தனர். பள்ளி அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரியா மாவட்ட அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து பயின்று வந்துள்ளார். கல்லூரியில் உள்ள மைதானத்தில் தினமும் அவர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் வியாணி ஸ்போர்ட்ஸ் அகாடமி டிரஸ்ட் என்ற ஒரு தனியார் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். ஃபார்வர்ட் பிளேயரான இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் பலமுறை வுமன் ஆப் தி மேட்ச் பட்டங்களை வாங்கியுள்ளார். தமிழ்நாடு அணியில் இடம்பிடித்து அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும் என்பதே பிரியாவின் நோக்கமாக இருந்தது.

* மாணவி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி
கால்பந்து வீராங்கனை குடும்பத்தை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கால்பந்து வீராங்கனை இறந்து குறித்து விசாரிக்க உடனடியாக மருத்துவ வல்லுனர் குழு ஒன்றை அமைத்தோம். அதில், பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவும் காரணம் என்று தெரிந்தது. கவனக்குறைவுடன் மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்படும். தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

* 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்
பிரியாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில், பெரியார் நகர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் சோமசுந்தர், உதவி பேராசிரியர் பால் ராம் சங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

* பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, நேற்று காலை உயிரிழந்த மாணவி பிரியாவின் பிரேத பரிசோதனை நேற்று நடந்து முடிந்தது. கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவி பிரியாவுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் சேதமடைந்ததால் உயர் சிகிச்சைக்காக கடந்த 10ம் தேதி ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் மாணவி சேர்க்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்தபோது, காயம் மேலும் அதிகரித்திருப்பதும், தசை வளர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

அதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழந்தது, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு மாணவி சென்றார். தசை கிழிந்ததால் தசையில் இருந்து வெளிவரக்கூடிய மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற துவங்கியது. அந்த திரவம் பொதுவாக சிறுநீர் வழியாக தான் வெளியேறும்.

ஆனால் திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு முதலில் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழத்தது. தொடர்ந்து, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் மாணவி பிரியா நேற்று காலை 7.15 மணியளவில் உயிரிழந்தார். இவ்வாறு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜ மாநில செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags : Priya ,Rajiv Gandhi Hospital , Football player Priya dies after having her right leg amputated at Rajiv Gandhi Hospital: Police swarm the hospital; The students are agitated by the protest
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...