×

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு எதிரொலி சென்னையில் என்ஐஏ சோதனை: 4 இடங்களில் நடைபெற்றது; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு எதிரொலியாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23ம் தேதி, கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.

சென்னையில் உள்ள என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும், அவர்களது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், பிரசார வீடியோக்கள் உள்பட பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கார் வெடிப்பில் இறந்த முபின், தனது கூட்டாளிகளுடன் இணைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. சம்பந்தப்பட்ட 6 பேரையும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் முன்பு என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் மண்ணடி, ஜமாலியா, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. திருப்பூரில் ஜமேஷா முபினின் தங்கை கணவர் வீடு, மயிலாடுதுறையில் ஒருவர் வீடு என பல இடங்களில் சோதனை நடந்தது.

போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததாக 18 பேரின் பட்டியலை தயாரித்து அவர்களது இடங்களில் சோதனையிடுமாறு என்ஐஏ அதிகாரிகள் தமிழக போலீசாரை கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று சோதனை நடந்தது. என்ஐஏ அதிகாரிகளுடன் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார், கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் வள்ளுவர் தெரு பகுதியில் உள்ள முகமது தப்ரீஷ் (28) என்பவர் வீட்டில் நேற்று காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை தீவிர சோதனை நடத்தினர்.

இதில், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை ஏழுகிணறு சேவியர்ஸ் தெருவில் உள்ள தௌபிக் அகமது என்பவரது வீடு, முத்தியால்பேட்டை சைவ முத்தையா தெருவில் ஹாருன் ரசீத் என்பவரது வீடு, மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் முகமது முஸ்தபா என்பவரது வீடு ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகளுடன் பூக்கடை துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 8.30 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இதில் ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coimbatore ,NIA ,Chennai , Coimbatore car cylinder blast case reverberates NIA raid in Chennai: Held at 4 locations; Seizure of important documents
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...