கேரள அரசுடன் மோதல் கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டம்: சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா எம்பி உட்பட லட்சம் பேர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து  திருவனந்தபுரத்தில் இடதுசாரி கூட்டணி கட்சிகள் சார்பில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர்களை நேரடியாக அவர் விமர்சித்து வருகிறார். கவர்னரின் நடவடிக்கைக்கு இடது சாரி கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கவர்னரை பயன்படுத்தி கேரள அரசுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், உயர் கல்வித் துறையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று இடதுசாரி கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக திருவனந்தபுரம் மியூசியம் பகுதியில் இருந்து ராஜ்பவன் நோக்கி ஏராளமானோர் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து நடந்த முற்றுகை போராட்டத்தில் திமுக எம்பி  திருச்சி சிவா, இந்திய கம்யூ., மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘இது தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான போராட்டம் அல்ல. கவர்னரும், ஒன்றிய அரசும் மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிகளுக்கு எதிரான போராட்டம். இந்தியாவை காப்பாற்றும் போராட்டம். மாநிலத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி  கேரளாவை சீர்குலைக்க கவர்னர் முயற்சிக்கிறார். மாநில அரசுகளின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. இதற்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் தீவிரமடையும்,’ என பேசினார்.

திருச்சி சிவா எம்பி பேச்சு: போராட்டத்தில் திருச்சி  சிவா பேசுகையில், ‘நாட்டின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜ இறங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் மாநில உரிமைகளைப்  பறிப்பதாகவே உள்ளது. கேரள மக்களுக்கு என்ன வேண்டும் என்பது முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு தான் தெரியும். தமிழக மக்களுக்கு என்ன வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் தெரியும். ஆரிப் முகம்மது கானுக்கும், ஆர்.என்.ரவிக்கும் மாநிலங்களின் பிரச்னை தெரியாது. ஆளுநர்களால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.

* பினராய் விஜயன், அமைச்சர்கள் பங்கேற்கவில்லை

இந்தப் போராட்டத்தில் முதல்வர் பினராய் விஜயன் உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பினராய் விஜயன் உள்பட அமைச்சர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Stories: