×

தமிழகத்தில் கனமழை பெய்யும் அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: 18ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும்

சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று 18ம் தேதி தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிகத்தில்கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் கேரளா வழியாகஅரபிக் கடலில் கலந்தது. இந்த கால கட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது.தற்போது மழை பெய்வது குறைந்து சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் வெயில் நிலவுகிறது. இதற்கிடையே, கிழக்கு திசையின் காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருநெல்வேலியில் நேற்று 120 மிமீ மழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, வடக்கு அந்தமான் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.  இது மேலும் வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரத்தை நெருங்கி வரும். 18ம் தேதி அன்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு வரும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

பின்னர் 19ம் தேதி  தமிழக கடலோரத்தை தொடும். அதற்கு பிறகு  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : tamil nadu ,andaman , Heavy rains in Tamil Nadu New pressure near Andaman: It will become a depression on 18th
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து