உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஐநா உள்ளிட்ட அமைப்புகள் தோல்வி: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக தலைவர்களுக்கு அழைப்பு

பாலி: இந்தோனேஷியாவின் பாலி தீவில் நேற்று தொடங்கிய ஜி20 மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பதில் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இவற்றில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து பேசினார். உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென மாநாட்டில் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி தீவில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர். உணவு, எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர், அதன் காரணமாக ஏற்படும் உலகளாவிய பிரச்னைகள் என இவை அனைத்தும் உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. சர்வதேச விநியோக சங்கிலிகள் தகர்ந்து போயுள்ளன. அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவை உள்ள பொருட்களுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் சவால்கள் இன்னும் மோசமாகி உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஐநா போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகள் வெற்றி பெறவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர நாம் தவறி விட்டோம். எனவே, இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனியாவது, நாம் உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு புதிய உலக ஒழுங்குமுறையை உருவாக்கும் பொறுப்பு நம் கையில் உள்ளது. உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். புத்தர், காந்தி பிறந்த புனித பூமியில் ஜி-20 கூட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும்போது அமைதி குறித்த வலுவான செய்தியை உலகிற்கு தெரிவிக்க நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார். இன்று 2வது நாள் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இரவு டெல்லி திரும்புகிறார்.

இன்று உரத்தட்டுப்பாடு; நாளை உணவு தட்டுப்பாடு

* மாநாட்டில் உணவு பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘இன்றைய உரத் தட்டுப்பாடு, நாளைய உணவுத் தட்டுப்பாடுக்கான அறிகுறி. இந்த பிரச்னைக்கு உலகம் இன்னும் தீர்வு காணாமல் உள்ளது. உரம், உணவு தானிய விநியோக சங்கிலியை நிலையாக, உறுதியாக வைத்திருக்க நாம் பரஸ்பர ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும்,’ என அழைப்பு விடுத்தார்.

* ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்த கம்போடியா பிரதமர் ஹன் சென்னுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. உடனடியாக அவர் மாநாட்டில் பங்கேற்காமல் நாடு திரும்பினார். நேற்று முன்தினம் தாமதமாக அவர் வந்ததால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்ட தலைவர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்க முடியாமல் போனது.

* உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்ய, ஜி20 அமைப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான அம்சங்கள் மாநாட்டின் நிறைவில் தீர்மானத்தில் இடம் பெறும்.

* அதிபர் பைடனுடன் பேச்சு

மாநாட்டின் இடையே உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புகளை மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடன் மோடி மிக நெருக்கமாக கைகுலுக்கி பேசினார். முதல் முறையாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடனும் பேசினார். அதிபர் பைடனுடனான மோடியின் சந்திப்பு குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இரு தலைவர்களும் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட கணினி, செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு, இருதரப்பு உறவின் ஆழத்தை ஆய்வு செய்தனர். குவாட், ஐ2யு2 போன்றவற்றில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த பைடனின் தொடர்ச்சி்யான ஆதரவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அடுத்ததாக, ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில், இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பைத் தொடரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* டிரம்ஸ் வாசித்த மோடி

பாலியில் இந்திய வம்சாவளிகளை சந்திக்க வந்த பிரதமர் மோடிக்கு டிரம்ஸ் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, உற்சாகமடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்த கலைஞர்களின் டிரம்ஸ்களை வாசித்து மகிழ்ந்தார். அப்போது பேசிய மோடி, ‘இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையே கடினமான காலங்களில் கூட வலுவான உறவு இருந்துள்ளது. சவாலான காலங்களில் இந்தோனேஷியாவுடன் இந்தியா உறுதியாக துணை நின்றது. இந்தியாவில் பிரமாண்ட ராமர் கோயில் உருவாகும் நேரத்தில், இந்தோனேஷியாவின் ராமாயண பராம்பரியத்தையும் நாம் பெருமையுடன் நினைவு கூறுவோம்,’’ என்றார்.

* சீன அதிபருடன் கைகுலுக்கிய மோடி

ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த இரவு விருந்தில் பங்கேற்க வந்தபோது, எதிரே வந்த பிரதமர் மோடியை பார்த்ததும் சீன அதிபர் ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்றார். இரு தலைவர்களும் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு சென்றனர். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் எல்லையில் இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவத்திற்குப் பிறகு மோடி-ஜின்பிங் பேசியிருப்பது இதுவே முதல் முறை.

Related Stories: