×

நெல்லை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகள் பற்றாக்குறை: மகளிர் பெட்டியில் இடநெருக்கடி

நெல்லை: நெல்லை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகள் பற்றாக்குறை காரணமாக பயணிகள் இடநெருக்கடியில் பயணித்து வருகின்றனர். அதிலும் மகளிர் பெட்டி சிறியதாக இருப்பதால், 20 பெண்கள் மட்டுமே அதில் பயணிக்க முடிகிறது. நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 4 முறை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கும் 4 முறை தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் கொரோனா காலத்திற்கு முன்பு 17 பெட்டிகளோடு இயக்கப்பட்டு வந்தன. இதனால் நெல்லை, தென்காசிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வசதியாக பயணம் செய்தனர்.

கொரோனா நிறைவுற்ற பின்னர் இப்போது இயக்கப்பட்டு வரும் செங்கோட்டை ரயில்களில் 17 பெட்டிகளை 14 பெட்டிளாக குறைத்துவிட்டனர். இதனால் செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரயிலில் அம்பை, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் சில சமயங்களில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியதுள்ளது. அதிலும் மகளிருக்கான தனிப்பெட்டி மிகவும் சிறியதாக உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்கள் சுதந்திரமாக மகளிர் பெட்டியில் பயணிக்கவே விரும்புகின்றனர். ஆனால் அந்த பெட்டியில் 20க்கு மேற்பட்டோர் அமரமுடிவதில்லை. இதனால் பெண்கள் பொதுப்பெட்டிகளுக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட ரயில்பயணிகள் சங்க தலைவர் செபாஸ்டியன் கூறுகையில், ‘‘ இருமார்க்கத்திலும் நெல்லை- செங்கோட்டை ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ஆனால் ரயில் பெட்டிகள் போதுமானதாக இல்லை. மகளிர் பயணம் செய்யும் பெட்டியையும் பெரிய பெட்டியாக மாற்ற வேண்டும். நெல்லையில் இருந்து முன்பு கொல்லத்திற்கு காலை 7 மணிக்கும், 12.30 மணிக்கும் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரயில்களையும் இவ்வழித்தடத்தில் மீண்டும் இயக்க வேண்டும்.’’ என்றார்.

* இருமடங்கு பார்க்கிங் கட்டணம்
நெல்லை- செங்கோட்டை ரயில்களில் 70க்கும் மேற்பட்டோர் மாதாந்திர பாஸ் எடுத்து பயணித்து வருகின்றனர். இவர்களில் பலர் ரயில் ஏறும் நிலையத்திலும், இறங்கும் ரயில் நிலையத்திலும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது வழக்கம். தாங்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை ரயில்வே வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு ரயில்களை பிடிப்பதுண்டு. இதற்காக ரயில்வே வாகன காப்பகத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.200 கட்டணமாக செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரை கோட்டம் முழுவதும் மாதாந்திர இருசக்கர வாகன கட்டணம் ரூ.200லிருந்து ரூ.375 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது. இரு மடங்கு பார்க்கிங் கட்டணம் உயர்வால் சீசன் டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நெல்லை ரயில் நிலையம் மற்றும் அம்பை ரயில் நிலையங்களில் வாகன காப்பக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Nellai-Sengottai , Lack of coaches in Nellai-Sengottai train: Women's coach is crowded
× RELATED யானை தாக்கி விவசாயி பலி