×

அரசுடன் மோதல் எதிரொலி கேரள கவர்னர் மாளிகை முற்றுகை: ஒரு லட்சம் பேர் இன்று காலை பேரணியாக சென்றனர், சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா எம்பி பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் இடதுசாரி  கூட்டணி கட்சிகள் சார்பில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் சமீப காலமாக மாநில அரசுடன் மோதல் போக்கை  கடைப்பிடித்து வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களை  நேரடியாக அவர் விமர்சித்து வருகிறார். தனது விருப்பத்திற்கு மாறாக  செயல்படும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து விடுவேன் என்றும்  எச்சரித்தார்.

இதையடுத்து கவர்னர் ஆரிப்  முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இடையேயான மோதல் போக்கு  நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது. இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கவர்னரின் நடவடிக்கைக்கு இடது சாரி கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுவிர கவர்னரின்  செயல்பாட்டை கண்டித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதற்கிடையே கவர்னரை பயன்படுத்தி கேரள அரசுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், உயர் கல்வித் துறையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நவம்பர் 15ம் தேதி (இன்று) 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிரடியாக அறிவித்து இருந்தன.

அதன்படி இன்று காலை முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து ராஜ்பவன் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் சிபிஎம், சிபிஐ, இடதுசாரி கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் ராஜ்பவன் அருகே முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி திருச்சி சிவா, சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன், சிபிஐ முன்னாள் மாநில செயலாளர் பன்னியன் ரவீந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று போராட்டத்தை தொடங்கி வைத்த சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார். இன்று காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கிய இந்த  முற்றுகைப் போராட்டம் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி  ராஜ்பவன்  முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

* இந்தியாவை காப்பாற்றும்  போராட்டம்
சீதாராம் யெச்சூரி  பேசியது: இது தனிப்பட்ட ஒருவருக்கு எதிராக நடைபெறும் போராட்டம் அல்ல. கவர்னரும், ஒன்றிய அரசும் மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிகளுக்கு எதிரான போராட்டமாகும். உயர் கல்வித்துறையில் கேரளாவில் மட்டுமல்லாமல் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, தெலங்கானா உள்பட மாநிலங்களிலும் இதே போல பிரச்சினைகள் உள்ளன. இது  இந்தியாவை காப்பாற்றும்  போராட்டமாகும். கேரளா உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசு கவர்னர்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது.

மாநிலத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி கேரளாவை சீர்குலைக்க கவர்னர் முயற்சிக்கிறார். ஒன்றிய அரசை போலவே மாநிலங்களுக்கும் சம அதிகாரம் உள்ளது. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் மாநில அரசின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. இதற்கு எதிராக தேசிய அளவில் போராட்டம் தீவிரமடையும். வேந்தர் பதவி என்பது கவர்னருக்கு சுயமாக கிடைத்தது அல்ல. மாநில சட்டங்களின்படி தான் கவர்னருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. எனவே மாநில சட்டம்தான் முக்கியமாகும். துரதிர்ஷ்டவசமாக சில நீதிமன்ற தீர்ப்புகள் மாநில சட்டங்களுக்கு எதிராக அமைந்துள்ளது.

யுஜிசி நிபந்தனைகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுவது ஜனநாயக விரோத செயலாகும். ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் பாசிச கொள்கைகளை கேரளாவில் அமல்படுத்தவே கவர்னர் முயற்சிக்கிறார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் இந்த நடவடிக்கை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். உயர் கல்வித்துறையில் கேரளாவின் சாதனைகளை மழுங்கடிக்கவே கவர்னர் முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

*பினராயி விஜயன் பங்கேற்கவில்லை
இந்தப் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பினராயி விஜயன் உள்பட அமைச்சர்கள் யாரும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

Tags : Kerala Governor House ,Sitaram Yechury ,Trichy Shiva , Clash with Govt Echoes Kerala Governor House Siege: One Lakhs Rally This Morning, Sitaram Yechury, Trichy Siva MP Participate
× RELATED ஜனநாயகத்தின் மீது 10 ஆண்டாக தாக்குதல்...