×

பருவமழை தீவிரம் எதிரொலி: தோவாளையில் பூ வியாபாரம் மந்தம்

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் தோவாளையில் உலக பிரசித்திபெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, காவல்கிணறு உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும் சங்கரன்கோவில், ராஜபாளையம், மானாமதுரை, மதுரை, கொடைரோடு பகுதிகளில் இருந்து மல்லிகை, பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், சேலம் பகுதியில் இருந்து அரளி, தென்காசி, அம்பாசமுத்திரம், திருக்குறுங்குடி பகுதிகளில் இருந்து பச்சை பூ மற்றும் துளசியும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுபோல் ஆரல்வாய்மொழி, தோவாளை, மருங்கூர் பகுதிகளில் இருந்து கிரேந்தி, சம்பங்கி உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வருகின்றன.

தோவாளை மலர் சந்தைக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம், சாலை பகுதி வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். இதுபோல தோவாளை மலர் சந்தையில் இருந்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தோவாளை மலர் சந்தையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர். மேலும் இங்கு பூ மற்றும் மாலைகள் கட்டுவது, பூச்செண்டு தயாரித்தல் உள்ளிட்ட பணிகளிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதனால் மலர் செடிகளில் அதிகளவில் பூக்கள் மலர்கின்றன. பொதுவாக பனிக்காலங்களில் பூக்கள் மலர்வது மிகவும் பாதிக்கும். இதுபோல பூக்களை பறிக்காமல் செடிகளில் விட்டுவிட்டால் அது விளைச்சலை பாதிக்கும். இதனால் விற்பனை குறைந்தாலும் விவசாயிகள் பூக்களை செடிகளில் இருந்து பறித்து விடுவர். தற்போது மழையால் நனையும் பூக்களை பறிக்கும்போது அவை சேதமடைகின்றன. இதனால் மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்க யோசிக்கின்றனர். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் பூக்களின் விலை ஓரளவு குறையாமல் உள்ளது. மல்லி ரூ.700, பிச்சி ரூ.500, அரளி ரூ.300, கிரேந்தி ரூ.60, மஞ்சள் கிரேந்தி ரூ.65 என விற்பனை ஆகி வருகின்றன.


Tags : Thowali , Monsoon intensity reverberates: Flower business slows down in Thowali
× RELATED தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை...