30 அடிஉயர நுழைவு வாயில் மீது ஏறி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரை போலீசார் மீட்டனர்: விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று காலை பரபரப்பு

விழுப்புரம்: குற்றவழக்குகளில் தொடர்புடைய நபரை அழைத்துவந்தபோது இன்று காலை விழுப்புரம் நீதிமன்றத்தில் 30 அடி உயர நுழைவு வாயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதி பாதிராப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (50). இவர் மீது மயிலம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று மயிலம் காவல் நிலையத்தில் 2016ம் ஆண்டு அடிதடியில் ஈடுபட்ட வழக்கில் அய்ய னாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

விசாரணைக்கு வராததால், போலீசார் அவரிடமிருந்து மொபைல் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குடிபோதையில் இருந்த அய்யனார் பெட்ரோலுடன், இன்று காலை 7.30 மணியளவில் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்து, நுழைவு வாயில் (ஆர்ச்) மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூச்சலிட்டார். இதனை அங்கிருந்த நீதிமன்ற ஊழியர் பாலாஜி என்பவர் கவனித்து உடனடியாக மேலே ஏற முயன்ற அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி வைத்துக் கொண்டார்.

அதனையடுத்து அவரை கீழே இறங்குமாறு பலமுறை கூறியும் இறங்காததால், உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் ஏணி மற்றும் கயிறு உதவியுடன் 30அடி நுழைவு வாயில் மேலே இருந்து கயிற்றை கட்டி பத்திரமாக கீழே இறக்கினர். அதனையடுத்து ஆம்புலன்சின் உதவியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: