கரூர் அருகே பரபரப்பு: வீடு கட்டுமான பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கரூர் அடுத்த சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று சென்ட்ரிங் வேலை நடைபெற்று வந்துள்ளது. அப்போது மோகன்ராஜ், சிவா, மற்றும் ஜீவா என்ற 3 இளைஞர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் மரத்தை பிரிக்க உள்ளே சென்ற சிவா என்பவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.

தகவல் அறிந்து சக தொழிலாளர்கள் மீட்க சென்ற போது அவர்களும் மயக்கமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மயக்கமான நிலையில் 3 பேரும் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கரூர் எஸ்.பி. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: