×

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்

சென்னை: முகலிவாக்கம் பகுதியில் தேங்கியுள்ள நீரினை வெளியேற்றும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156 க்குட்பட்ட முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியில் போரூர் ஏரியிலிருந்து வெளியேறி தேங்கியுள்ள உபரிநீரினை அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் மாநகராட்சிப் பணியாளர்களால் வெளியேற்றப்படுவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், வார்டு-156க்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் போரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரானது. இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளான திருவள்ளூர் நகர், ஆறுமுகம் நகர், தர்மராஜபுரம், சி.ஆர்.ஆர்.புரம் ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்பதைத் தடுத்திடும் வகையில் நீர்வளத் துறையின் சார்பில் போரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்வதற்காக ரூ.120 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதிகளில் தேங்கியுள்ள உபரிநீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் மாநகராட்சியின் சார்பில் உயர் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகளின் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை அமைச்சர் பெருமக்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, துரிதமாக தேங்கியுள்ள நீரினை வெளியேற்றவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்தப் பகுதிகளில் தேங்கியுள்ள போரூர் ஏரியின் உபரிநீரினை வெளியேற்றும் வகையில் மாநகராட்சியின் சார்பில் 100 குதிரைத் திறன் கொண்ட 3 மோட்டார்கள், 45 குதிரைத் திறன்  கொண்ட டிராக்டரில் பொருத்தப்பட்ட 1 பம்பு, 25 குதிரைத்  திறன் கொண்ட டிராக்டரில் பொருத்தப்பட்ட 3 பம்புகள், 10 குதிரைத் திறன் கொண்ட 2 மோட்டார் பம்புகள் மூலம் இக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீரானது வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிகளில் இருந்து பம்புகள் மூலம் வெளியேற்றப்படும் நீரானது மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களின் வழியே ராமச்சந்திரா கால்வாயில் கொண்டு சேர்க்கப்பட்டு அங்கிருந்து நந்தம்பாக்கம் கால்வாய் வழியாக அடையாறில் சென்றடைகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைக்கால வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 16 சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (15.11.2022) நடத்தப்படுகிறது.  இதில், 6 மருத்துவ முகாம்கள் முகலிவாக்கம் குடியிருப்புப் பகுதிகளான திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர், தர்மராஜபுரம், சி.ஆர்.ஆர்.புரம் ஆகிய பகுதிகளில்  நடத்தப்படுகிறது.

இந்த மருத்துவ முகாம்களையும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், மணப்பாக்கம்-கிரகம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள தர்மராஜபுரம் கால்வாயில் ரொபோடிக் எக்ஸகவேட்டர் இயந்திரங்களைக் கொண்டு திடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  தொடர்ந்து, இந்தப் பகுதிகளில் மருத்துவ முகாமை நடத்திடவும் அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர்  பெருமக்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர், அமைச்சர் பெருமக்கள் திருவள்ளுவர் நகர் மற்றும் ஆறுமுகம் நகர் பகுதிகளில் உள்ள 500 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது. போரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரானது மூன்று கால்வாய்களின் வழியே வெளியேறி வருகிறது.  இந்தக் கால்வாய்களில் போதிய கொள்ளளவு இல்லாத காரணத்தினால் அதிகப்படியான நீர் முகலிவாக்கம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் பெரு வடிகால்வாய் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.  இப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. மதனந்தபுரம் பகுதியில் கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டால் அடுத்த வருடம் இங்கு நீர்த்தேக்கம் ஏற்படாது.

மேலும், கால்வாய் செல்லும் சிறு பாலங்கள் (culvert) அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட பணிகள் முடிக்கப்பட்டுவிட்டால் அடுத்த வருடம் இந்தப் பகுதிகளில் தண்ணீர்  தேக்கம் இருக்காது. இந்தப் பருவமழையினால் ஏற்படும் நீர்த்தேக்கத்தை சீர்செய்ய மாநகராட்சியின் சார்பில் தேவையான அளவிற்கு உயர்குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, இப்பகுதியில் தேங்கிய நீரானது உடனடியாக வெளியேற்றப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மற்றும் மழையின் காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் குளிர் தார்க்கலவை மற்றும் ஜல்லி கலவை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சென்னையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளின் காரணமாகவே இந்த ஆண்டு  பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Mughalivakkam ,Chennai , Ministers review the effects of rain and flood in Mughalivakkam area of Chennai: Relief materials were provided to the victims
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...