கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்து வரும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம்தேதி அதிகாலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவிழாவில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்று வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாததால், பஞ்ச ரதங்களும் தற்போது முழுமையாக சீரமைக்கப்படுகிறது. இப்பணிகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றுகாலை திருவண்ணாமலை வந்தார். அவர் அண்ணாமலையார் கோயிலில் செய்யப்பட்டு வரும் தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் கோயிலுக்கு எதிரிலும், மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மற்றும் தூய்மை பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், அறநிலைய துறை ஆணையாளர் குமரகுருபரன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன், நகராட்சி தலைவர் நிர்மலாவேல்மாறன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதைதொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தற்காலிக பஸ் நிலையங்களை அமைத்தல், சிறப்பு பஸ்கள் இயக்கம், கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த ஆதி திருவரங்கத்தில் உள்ள 2000 ஆண்டுகள் மிக பழமையான ரங்கநாத பெருமாள் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், கோயில் முழுவதும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: