திருவள்ளூரில் வாகன சோதனை; 200 கிலோ குட்கா பறிமுதல்: வாலிபர் கைது; கார் பறிமுதல்

திருவள்ளூர்: குட்கா, கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை கடத்திவந்து விற்பனை செய்பவர்களை கைது செய்யவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையில், எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் ஈக்காடு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் வி-1 போன்ற 200 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி நடத்திய விசாரணையில், போதைப் பொருட்கள் கடத்திவந்த நபர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷகர்லால் (24) என்பதும் இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து போதைப் பொருட்களை வாங்கிவந்து திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து  200 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து ஷகர்லாலை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதன்பிறகு ஷகர்லாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: