×

சின்னமனூர் அருகே மலைக்கிராமங்களுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பை கண்டித்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்: 58 பேர் கைது

சின்னமனூர்: சின்னமனூர் அருகே மலைக்கிராமங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பதை கண்டித்து தென்பழனி மலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை செக் போஸ்ட்டை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம் சின் னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 8,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி சின்னமனூர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், ஹைவேவிஸ் சுற்றுலாத்தலமாகவும் உள்ளன. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தென்பழனி மலையடிவாரத்தில் சின்னமனூர் வனத்துறை சார்பில் செக்போஸ்ட் உள்ளது. இப்பகுதியை கடந்து செல்வோர் தங்களைப்பற்றிய விபரங்களை வனத்துறையிடம் பதிவு செய்ய வேண்டும்.

இதன் வழியாக மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 வரை வானகங்கள் செல்ல தடை அமலில் உள்ளது. இதற்கிடையே 7 மலைக்கிராம மக்கள் அத்யாவசிய பொருட்கள் வாங்கவும், தாசில்தார், கலெக்டர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்று குறிப்பிட்ட நேரத்தில் திரும்பிச் செல்ல முடியவில்லை. எனவே, மலைக்கிராமக்களுக்கு செல்ல வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

மணலாறிலிருந்து மகராஜன் மெட்டு செல்லும் 7 கி.மீ சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மலைக்கிராம மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று தென்பழனி வனத்துறை செக்போஸ்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை வனத்துறையினர் சமாதானம் செய்தனர். இதற்கிடையே அனுதியின்றி போராட்டம் நடத்தியதாக 58 பேரை கைது செய்த ஓடைப்பட்டி போலீசார் தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

Tags : Chinnamanur , Chinnamanur, forest department denied permission to go to hill villages, workers staged a siege, 58 people were arrested
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி