×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர். நேற்றிரவு நடுக்கடலின் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வழக்கம் போல் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து மீனவர்களை தாக்கி எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர்.

மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை பிடித்த கடற்படையினர் இரவு முழுவதும் படகுகளை நடுக்கடலில் நிறுத்திவைத்து மீனவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் கப்பல் அருகில் நீண்டநேரம் மூன்று படகுகளை நிறுத்தி வைத்ததால் படகில் இருந்த மீனவர்களை கைது செய்துள்ளதாக நினைத்து மற்ற மீனவர்கள் தங்களது படகுகளை வேறு கடல் பகுதிக்கு ஓட்டி சென்று மீன்பிடித்து இன்று அதிகாலை ராமேஸ்வரம் திரும்பினர்.

நடுக்கடலில் நிறுத்தி வைத்து படகுகளை பல மணிநேரத்திற்கு பின் கடற்படையினர் விடுவித்தனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினரின் தாக்குதல், விரட்டியடிப்பு சம்பவத்தினால் இன்று காலை ராமேஸ்வரம் கரை வந்து சேர்ந்த படகுகளில் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது. மேலும் நடுக்கடலில் மூன்று படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்களை அடித்து துன்புறுத்தி விடுவித்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Rameswaram ,Sri Lanka Navy , Attack on Rameswaram fishermen: Sri Lanka Navy atrocity
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...