தேனி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம்

* வல்லுனர் குழு அனுமதி

* வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

தேனி: தேனி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய சாலைகளில் மேம்பாலம் அமைக்க உயர்தொழில் நுட்ப வல்லுனர் குழு அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்ட தலைநகராக உருவான கடந்த 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தேனியில் பெருநகரங்களுடன் போட்டிபோடும் வகையிலான பிரபல ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பல்நோக்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடைகள் என மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பிரபல வர்த்தக நிறுவனங்கள் தேனிக்கு வந்துள்ளன.

மாவட்டத் தலைநகராக தேனி உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணியிட மாறுதலாகி வரும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேனியில் புதியதாக குடியேறுவதும் அதிகரித்துள்ளது. இதேபோல தேனி நகரானது வர்த்தக நகராகவும், கல்வி நகராகவும் மாறியுள்ளதால், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், கல்வியாளர்கள் குடும்பத்தினரும் தேனியில் குடியேறி வருகின்றனர். இதன்காரணமாக தேனி நகரில் மட்டுமல்லாது தேனி நகரை ஒட்டியுள்ள பழனிசெட்டிபட்டியிலும் புதிய குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒருபுறம் தேனி நகர் மற்றும் தேனி நகரை ஒட்டியுள்ள பி.சி பட்டி போன்ற பகுதிகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தேனிக்கு அலுவலக பணி, வர்த்தகம், கல்வி என பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பேருந்துகளிலும், கார், டூவீலர்களில் வந்து செல்கின்றனர். இதனால் நகரில் காலை முதல் இரவு வரை எப்போதும் போக்குவரத்து மிகுந்தே காணப்படுகிறது. தேனி நகரில் மிக முக்கிய சாலைகளாக பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலைகள் உள்ளன. இச்சாலைகளில்தான் எப்போதும் போக்குவரத்து மிகுந்து வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பண்டிகை காலங்களில் வாகனங்கள் விலகிச்செல்ல முடியாமல் நீண்ட நேரம் ஊர்ந்து செல்லும் அவலம் உள்ளது. இம்மூன்று சாலைகளின் சந்திப்பில் பழைய பஸ்நிலையம் செயல்படுகிறது. இதனால் பஸ்நிலையத்திற்கு வரும் பஸ்களின் எண்ணிக்கையாலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. தேனியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பை பாஸ் சாலையில் அமைக்க புதிய பேருந்து நிலையம் ஒப்பந்தப்பணி விடப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு இறுதியில் புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்டாலும், தேனி நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. தேனி நகர் முக்கிய மூன்று சாலைகளிலும் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தவும் போதிய இடவசதியின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் இருந்து போடி வரையிலான அகல ரயில் பயணிகள் சேவை கடந்த மே மாதம் 27ம் தேதி துவங்கியது. இதனால் நாளொன்றுக்கு இருமுறை தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கேட் மூடப்படும்போதும் சுமார் 20 நிமிடங்கள் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து விடுகிறது.

மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்படும் ரயில் சேவையானது போடி வரை பணிகள் முடிவடைந்ததும் மதுரையில் இருந்து போடி வரை இயக்கப்பட உள்ளது. இதுதவிர தொலை தூர ரயில்சேவையும் துவங்கப்பட உள்ளது. மேலும் சரக்கு ரயில்களும் இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது. ரயில் சேவையின்போது ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட்டில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது மற்றும் நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரியகுளம் சாலை, கம்பம்சாலை, மதுரை சாலைகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.

கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தபோதும், மேம்பாலம் அமைப்பதில் முனைப்பு காட்டவில்லை. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பாலம் அமைக்க முழு முயற்சி மேற்கொண்டனர். இதற்காக மண்பரிசோதனை செய்ய அப்போதைய அரசு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. பின்னர் மேம்பாலம் அமைக்க முழு முயற்சி எடுக்காததன் காரணமாக உயர் தொழில் நுட்ப வல்லுனர் குழு அனுமதி அளிக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட பிறகு சாலைமேம்பாட்டுப் பணிகளில் முழு கவனத்தை முதல்வர் செலுத்துவதன் காரணமாக மாநிலம் முழுவதும் சாலை மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இதன்காரணமாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கிடப்பில் கிடந்த மேம்பாலப் பணிகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, தேனி நகரின் மத்தியில் மேம்பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அறிக்கையை பெற்றுக்கொண்ட நெடுஞ்சாலைத் துறையின் உயர்தொழில் நுட்ப வல்லுனர் குழு ஏற்கனவே மண் பரிசோதனையில் பாலம் அமைக்க ஏற்ற இடம் என முடிவு இருப்பதை கவனத்தில் கொண்டு ஆய்வு நடத்தினர்.

ஆய்வின்முடிவில், இம்மாதம் 4ம் தேதி உயர்தொழில் நுட்ப வல்லுனர் குழு தேனி நகரில் பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலையில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேனி உதவிகோட்ட பொறியாளர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, தேனி நகரில் பெருகியுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தேனி நகர் பெரியகுளம் சாலையில் சுமார் 14 மீட்டர் அகல மேம்பாலம் சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல கம்பம் சாலயில் கொட்டக்குடி ஆற்று பாலத்திற்கு முன்பாக சுப்பன்தெரு திட்டச்சாலை பிரிவில் தொடங்கி, கம்பம் சாலை, நேரு சிலை பகுதியில் திரும்பி ஆர்சி சர்ச் வரையிலும் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு 7 மீட்டர் அகல மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பஸ்நிலையத்தில் இருந்து தேனி பழைய பஸ் நிலையம் வழியாக போடி, கம்பம் செல்லும் பஸ்கள் மேம்பாலத்தின் அருகே உள்ள சர்வீஸ் ரோடு வழியாக பழைய பஸ் நிலையம் செல்லும் வகையிலும், கம்பம், போடியில் இருந்து தேனி வழியாக மதுரை, திண்டுக்கல் செல்லும் பஸ்கள் பழைய பஸ்நிலையம் வராமல் பாலத்தின்மீதே சென்று ஆர்சி சர்ச் அருகே பயணிகளை இறக்கி விடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல, பெரியகுளம் சாலையில் அன்னலட்சுமி ஓட்டல் கார்பார்க்கிங் அருகே தொடங்கும் மேம்பாலமானது ரைஸ்மில் தெரு பிரிவில் உள்ள வெற்றிக்கொம்பன் விநாயகர் கோயில் அருகே இறங்கும் வகையிலும் அமைக்கவும், இதில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல மேம்பாலம் செல்லும்போது, ரயில்வே கிராசில், ரயில்வே தண்டவாலத்திற்கு கீழே ஆட்டோக்கள், டூவீலர்கள் செல்லும் வகையில் எல்யூஎஸ் எனப்படும் லிமிடெட் யூசேஸ் சர்வீஸ் சாலையுடன் கூடிய சுரங்கப்பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேனி நகரின் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்க உயர்தொழி்ல் நுட்ப வல்லுனர் குழு அனுமதி பெறுவதுதான் மிகவும் முக்கியமானது.

இந்த அனுமதி கிடைத்ததையடுத்து திட்ட மதிப்பீடு மற்றும் வரை பட தயாரிப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும், மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றார். இந்த மேம்பாலத்திற்கான செலவுத்தொகை ரூ.120 கோடி வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டு பணி முடிந்த பிறகே முழு மதிப்பீட்டு தொகை தெரியவரும் என்றார். தேனி நகரின் மத்தியில் இந்த மேம்பாலம் அமைந்தால் தேனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர் தங்களது வாகனங்களை பாலத்தின் அடியில் பார்க்கிங் செய்து கொள்ள வாய்ப்புள்ளதால் தேனி நகரில் கார், டூவீலர் பார்க்கி பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசல் முழுமையாக தீரும் என்பதால் இத்திட்டப்பணியை விரைந்து துவங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: