×

ஊராட்சி ஒன்றிய கிராம பகுதியில் வலைபோட்டு மூடாத கிணறுகளை ஆய்வு செய்ய நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்பகுதியில், வலைபோட்டு மூடாத திறந்த நிலையில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தாலுகாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலமே பெறப்படுகிறது. இதற்காக நிலங்களின் ஒரு பகுதியில், கிணறு வெட்டி அதிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஆனால் பல கிராமங்களில் சாலையோரமே கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.

அதுவும் பெரும்பாலான கிணறுகள் தரமட்ட கிணறாக உள்ளது. இதில் பல தரைமட்ட கிணற்றில் மேல் பகுதி மூடாமல் இருக்கிறது. சில கிணறுகளில் தண்ணீர் இன்றி வற்றியபடி உள்ளது. சாலையோரம் உள்ள தரைமட்ட கிணறுகளால் மக்கள் பீதியடைகின்றனர். சிலநேரங்களில் கால்நடைகள் கிணற்றில் தவறி விழுந்து இறப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கிராம பகுதியில் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சமடைகின்றனர். எனவே, சாலையோரம் திறந்தபடி இருக்கும் கிணறுகளை பாதுகாப்புடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகாவிற்குட்பட்ட கிராம பகுதியில் திறந்தவெளியில் உள்ள கிணறு மற்றும் போர்வெல்களை மூட அதிகாரிகள் நடைவடிக்கை எடுத்தனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, தாலுகாவிற்குடப்ட்ட வடக்கு, தெற்கு ஒன்றியத்திற்குடபட்ட அனைத்து  ஊராட்சி உள்ள கிராமங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பல இடங்களில் கிணறுகளும்,  போர்வெல்களும் பயனற்று திறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து பயனற்று கிடக்கும் கிணறு மற்றும் போர்வெல்களை மூட ஊராட்சி பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், பல கிராமங்களில் திறந்தவெளி கிணறுகள் இன்னும், இரும்பு வலைபோட்டு மூடப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் திறந்த வெளியில் உள்ள கிணறுகளை வலைபோட்டு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம பகுதியில் திறந்தவெளி கிணறுகள் இருந்தால் உடன் ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்தந்த உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு, கிராமங்களில் திறந்தவெளியாக பயனற்று கிடக்கும் கிணறுகளை கண்டறிந்து அதனில் வலைபோட்டு  மூட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தோட்ட பகுதியில் உள்ள கிணற்றை சுற்றிலும் தடுப்பு கம்பி அல்லது சுவர் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்’ என்றனர்.

Tags : Panchayat Union , Action taken to inspect the wells that have not been closed by netting in the Panchayat Union village area: Officials informed
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...