பெரும்பாறை மலைப்பகுதியில் தொடர் மழை: ஆத்தூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, கும்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக் கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புல்லாவெளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் கொட்டிவருகின்றது. பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது.இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். இந்த அருவி சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

இந்த அருவி விழும் மலைப்பகுதிகளும், அதனைச்சுற்றி பசுமையான ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதிகளும் உள்ளது. மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் ஆறாக பயணித்து இந்த இடத்தில்அருவியாக பாய்கின்றது.தற்போது இம்மலைப்பகுதியில் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால் அருவிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த அருவியில் அதிகளவில் விழும் தண்ணீர் காரணமாக குடகனாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் செல்லும் குடகாறு திண்டுக்கலுக்கு குடிநீர் ஆதாரமான காமராஜர் நீர் தேக்கத்திற்கு செல்கின்றது.

இதனால் காமராஜர் அணையின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். 20 நாட்களாக தொடர்ந்து அணை முழுகொள்ளவுடன் உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் மாறுகால் பாய்ந்து வருகின்றது. மேலும் ஆத்தூர், நிலக்கோட்டை போன்ற தாலுகாவில் உள்ளகுளங்களுக்கு பெரியார் ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் சென்றுவருகின்றது. இதனால் இப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி மாறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: