×

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ரூ.3719.4 கோடி மதிப்பில் 7 புதிய கூட்டு குடிநீர் திட்டம்: 3.95 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்

திருச்சி : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடப்பு நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 7 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் ரூ.3719.4 கோடி செலவில் ஒப்பந்தபுள்ளிகள் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 3 லட்சத்து 95 ஆயிரத்து 869 பேர் பயனடையவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தில் குடிநீர் இல்லாத கிராமமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான். எனவே நீர் ஆதாரம் அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து நீர் ஆதாரம் குறைவாகவும், நீர் ஆதாரமே இல்லாத மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பதற்காகவே பல புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை அரசு அறிவித்து அதற்கென பல ஆயிரம் கோடி ரூபாயை நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த திட்டங்கள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்டங்கள் தோறும் சென்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களின் புதிதாக தொடங்கப்பட உள்ள கூட்டு குடிநீர் திட்ட பணிகளை செயல்படுத்த தலைமை பொறியாளர் முரளி மற்றும் கண்காணிப்பு பொறியாளர் மாதவன் ஆகியோருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தும் கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 நகராட்சி, 3 பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கு 6 லட்சத்து 97 ஆயிரத்து 644 மக்களுக்கு தினமும் 35.88 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி, கீழ்வேளுர் பேரூராட்சி மற்றும் 890 குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் (நபார்டு) மூலம் ரூ.42.46 கோடியில் செயலாக்கத்தில் உள்ளது.

2022-2023 நிதயாண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி, கீழ்வேளுர், திட்டச்சேரி, தலைஞாயிறு பேரூராட்சி மற்றும் நாகை, கீழ்வேளுர், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஒன்றியங்களை சார்ந்த 980 ஊரக குடியிருப்புகளுக்கு 1752 கோடியில் அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளை தொடங்க கடந்த மாதம் ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் செயலாக்கதிற்கு வரும்போது 1 லட்சத்து 60 ஆயிரத்து 57 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 திட்டங்கள் மூலம் 1 நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 958 ஊரக குடியிருப்புகளுக்கு 10 லட்சத்து 77 ஆயிரத்து 438 மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 50.829 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சி (திருவிடைமருதூர், வேப்பத்தூர்) குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.117.09 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்தில் உள்ளது.

அதேபோல் கும்பகோணம் ஒன்றியத்தை சார்ந்த 134 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் 91.13 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்தில் உள்ளது. இந்த திட்டங்கள் செயலாக்கத்திற்கு வரும்போது 28,378 வீட்டுக்குழாய் இணைப்புகள் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 2 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் 553.31 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு மற்றும் தஞ்சாவூர் ஒன்றியங்களில் உள்ள 214 (164) குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஒப்பந்தபுள்ளி பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும் பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 252 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தால் 35,519 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்படும்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஒன்றியங்கள் (மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் மற்றும் குத்தாலம்) 2 பேரூராட்சிகள்(குத்தாலம், தரங்கம்பாடி) மற்றும் 666 ஊரககுடியிருப்புகளுக்கு 6 லட்சத்து 39ஆயிரத்து 897 பேருக்கு தினமும் 29.57 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சீர்காழி ஒன்றியத்தில் 32 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.36.14 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் செம்பனார்கோயில், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களை சேர்ந்த 1042 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஊரக குடியிருப்புகளில் தற்போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும் குடிநீர் அளவான 40 லிட்டரில் இருந்து 55 லிட்டர் அளவிற்கு உயர்த்தி 1042 கிராம குடியிருப்புகளுக்கு 1 லட்சத்து 63 ஆயிரத்து 630 வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கிடவும், இதனால் 2054 ம் ஆண்டிற்குள் பயன் பெறும் மொத்த மக்கள் தொகை 13 லட்சத்து, 68 ஆயிரத்து, 112 பேர் ஆகும்.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் 4 கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 2 நகராட்சிகள், 1 பேரூராட்சிகள் மற்றும் 413 ஊரக குடியிருப்புகளுக்கு 3 லட்சத்து 77 ஆயிரத்து 689 மக்களுக்கு நாள்தோறும் 14.49 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைபூண்டி, கோட்டூர், திருவாரூர் மற்றும் கொராடச்சேரி ஆகிய 6 ஒன்றியங்களை சேர்ந்த 667 குடியிருப்புகள் பயன்ெபறும் வகையில் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பிறப்பித்து ரூ.1127.20 கோடிக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

ஒப்பந்தபுள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டம் 2024ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 43,804 வீட்டுக்குழாய்கள் இணைப்பு வழங்கப்படும். மேலும் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி நகராட்சிகள், முத்துப்பேட்டை மற்றும் பேரளம் பேரூராட்சிகள், திருதுறைபூண்டி, கோட்டூர், மன்னார்குடி, வலங்கைமான், நீடாமங்கலம், குடவாசல் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள 824 (255) ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 130.769 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 27லட்சத்து 92 ஆயிரத்து 968 பேர் பயனடைந்து வருகின்றனர்.

Tags : Nagapattinam ,Mayiladudurai ,Thiruvarur ,Thanjavur , Nagapattinam, Mayiladuthurai, Tiruvarur, Thanjavur, 7 new joint drinking water projects
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்