×

வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதிகளுடன் தரம் மாற்றப்படுமா?.. கிராம மக்கள் எதிர்பார்ப்பு

குளத்துர்: வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். குளத்தூர் அருகே உள்ளது வேப்பலோடை. ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட இக்கிராமத்தை சுற்றி பாண்டியாபுரம், கழுகாசலபுரம், தெற்கு கல்மேடு, வடக்கு கல்மேடு, துரைச்சாமிபுரம், சுந்தரேசபுரம், வெங்கடாசலபுரம், தருவைக்குளம், சுண்டன்பச்சேரி, பட்டினமருதூர், பாலார்பட்டி, அய்யனார்புரம், தப்பாசிபட்டி, வேடநத்தம், பட்டியூர், சண்முகபுரம், கொல்லம்பரம்பு, முள்ளூர், அய்யர்பட்டி என 27 கிராமங்கள் உள்ளன. இந்த 27 கிராம மக்களும் உப்பளத்தொழில், மீன்பிடித் தொழில், விவசாயம், பனைத்தொழில் என பல்வேறு தொழில்களை செய்துவருகின்றனர்.

இப்பகுதி மக்கள் மருத்துவ தேவைக்கு வேப்பலோடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 35 ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ரசாயன தொழிற்சாலைகள், உப்பள தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், ஜிப்சம் தொழிற்சாலைகள் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இம்மருத்துவமனையில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதுமான படுக்கை வசதி இல்லாததால் அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் ஒட்டநத்தம் வட்டார அரசு மருத்துவமனையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான பேறுகாலம் வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நடந்துள்ளது.

இதனால் வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகளுடன் தரம் மேம்படுத்தி தர வேப்பலோடை அன்னை தெரசா சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை மருத்துவமனையில் எந்த வசதியும் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. எனவே இப்பகுதி மக்களின் சுகாதார வாழ்க்கையை கருத்தில் கொண்டு 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேப்பலோடை அன்னை தெரசா கிராம நலச் சங்க செயலாளர் ஜேம்ஸ்அமிர்தராஜ் கூறியதாவது: வேப்பலோடை மற்றும் தருவைகுளம் சுற்றுப்பகுதியில் அதிகமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இம்மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதால் வீண் அலைச்சல் தான் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி என்பதால் அவசர சிகிச்சைக்கு கூட படுக்கை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் 30 படுக்கை வசதி கேட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளித்தோம். ஆனால் அவர்கள் பொதுசுகாதார பிரிவு சென்னைக்கு அனுப்பி கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவே கூறி வருகின்றனர், என்றார். நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில் முறையான மருத்துவ வசதி இல்லாமல் இருப்பது இப்பகுதி மக்களிடையே வேதனையாக உள்ளது. எனவே இக்கிராம பகுதி மக்களின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு விரைவாக வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : Vepalodai Government Primary Health Center , Veppalodai Government Primary Health Centre, will the quality be changed?, expectations of the villagers
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...