×

தாளவாடி அருகே அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் புறம்போக்கு நிலம் வழங்க மலைக்கிராம மக்கள் கலெக்டருக்கு மனு

ஈரோடு:  தாளவாடி அருகே உயர்நிலைப்பள்ளி அமைக்க 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மலைக்கிராம பழங்குடி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியம், கோட்டாடை, ஒசட்டி, குளியாடா, புதுக்காடு, சோக்கிதொட்டி, உப்பட்டி, அட்டப்பாடி, சீகட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில், 60 சதவீதம் பேர் பழங்குடியின மாணவ, மாணவிகள். இவர்கள் 8ம் வகுப்பு முடித்து  உயர்கல்வி கற்க சுமார் 20 கிமீ தூரம் வனப் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. முறையான பேருந்து வசதிகளும் இல்லாததால் இப்பகுதி குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்கும் நோக்கில் கோட்டாடை நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கடந்த 2013ல் கிராம மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளியை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, அரசு பள்ளி கல்வித்துறை மூலமாக பள்ளியை தரம் உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பள்ளி அமைய கோட்டாடை கிராமத்தில், 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Thalawadi , Thalawadi, Government School, Outcast Land, Hill Village People
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்