பிரியா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது: துணை காவல் ஆணையர் ஆல்பர்ட் ஜான் பேட்டி

சென்னை: பிரியா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என துணை காவல் ஆணையர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பிரியாவுக்கு பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ஏற்பட்ட சிக்கலால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா இன்று உயிரிழந்தார்.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பெரவள்ளூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே வீராங்கனை பிரியா உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து பிரியாவின் உடலை எடுத்து செல்லும் அமரர் ஊர்தியின் முன்பு நின்று பிரியாவின் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவரை கைது செய் என பிரியாவின் நண்பர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரியாவின் உறவினர்கள், நண்பர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உயிரிழந்த பிரியாவின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

பரபரப்பான சூழல் நிலவுவதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை காவல் ஆணையர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பிரியா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செத்து விசாரித்து வருகிறோம். மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: