×

மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர் காலத்து சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிள்ளுகுடி கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக, அவ்வூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலைகள் பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் தேவி சிலை என்று தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘‘பெருமாள் சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட தனி கல்லில் சிலையாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி, கைகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. கழுத்தில் ஆபரணங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் முப்புரி நூலும் இடையில் இடைக்கச்சை கால்வரையிலும் இடையின் இருபுறமும் ஆடையின் நீட்சிகள் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் கீழ் பகுதி கூம்பு வடிவமாகவும் அதற்கு மேல் திண்டு போன்ற அமைப்பில் நின்றகோலத்தில் சிலை அழகான முறையில் வடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலையானது முட்டிக்கு கீழே உள்ள பகுதி மட்டுமே உள்ளது. இந்த சிலையில் ஆடை கெண்டைக்கால் வரை செதுக்கப்பட்டுள்ளது. அதே போல் இரண்டு கால்களிலும் தண்டை அணிந்தபடியும் இந்த சிலை சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது.

இந்த கல் அமைப்பும் பெருமாள் சிலையின் அமைப்பும் ஒரே காலத்தையும் வடிவமைப்பையும் ஒத்து காணப்படுகிறது. இந்த சிலை ஒற்றுமையின் காரணமாக இந்த சிலை ஸ்ரீதேவியின் சிலையாக இருக்க வேண்டும் அல்லது பூமாதேவியின் சிலையாக இருக்கலாம். மேலும் ஒரு சிலை இந்தப் பகுதியில் புதைந்து இருக்கலாம், இந்த சிலைகளை பார்க்கும்போது இந்த பகுதியில் ஒரு பழமையான பிற்கால பாண்டியரின் பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னர் கால ஓட்டத்தில் அந்த கோயில் அழிந்திருக்கலாம்’’ என்றனர்.

Tags : Manamadurai , Manamadurai, Late Pandya period idols, discovery
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்