×

பசி, பட்டினி... விளைநிலங்கள், வீடுகளை சூழந்த வெள்ளம்... கண்ணீரில் தெற்கு சூடான் மக்கள்..!

தெற்கு சூடான்: பசி, பட்டினி கொடுமையால் உள்நாட்டு கலவரங்களில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் தெற்கு சூடானை வரலாறு காணாத வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. ஒரு வேலை உணவுக்கே வழி இல்லாமல் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிகச்சிறிய நாடான தெற்கு சூடான் உலகில் கடைசியான உருவான நாடு. மக்கள் தொகை 1.14 கோடி மட்டுமே. 2011ம் ஆண்டில் சூடானில் இருந்து பிரிந்தது முதலே பசி, பட்டினி, உள்நாட்டு கலவரங்களுக்கு பஞ்சமில்லாத நாடாக மாறிவிட்ட தெற்கு சூடானை இயற்கை பேரிடர்களும் தங்கள் பங்குக்கு சேர்ந்து வாட்டி வதைக்கின்றன.

உலகில் மிக வேகமாக வெப்பமடையும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் தொடர்ந்து 4வது ஆண்டாக வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் மழையால் நாட்டின் சரிபாதி பகுதிகள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 3-ல் இருவர் பட்டினி கொடுமையை அனுபவித்து வரும் தெற்கு சூடானில் வரலாறு காணாத வெள்ளம் பசி கொடுமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் வெள்ளத்தால் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் பாசி படர்ந்த ஈர நிலங்கள் 3 மடங்கு அதிகரித்து விட்டதால் விளைநிலங்கள் அளவும் சுருங்கி வருகிறது.

தெற்கு சூடானின் 10 முதல் 15 விழுக்காடு நிலப்பகுதிகள் பாசி படர்ந்த ஈர நிலங்களாக மாறிவிட்டன. உணவு இல்லாமல் தண்ணீர் மற்றும் காடுகளில் கிடைக்கும் பொருட்களை உண்ணும் மக்கள் ஆண்டுக்கு ஆண்டு இங்கு அதிகரித்து வருகின்றனர். சரிபாதி நாடு வெள்ளத்தால் தவிக்கும் அதே வேளையில் மிஞ்சியிருக்கும் சரிபாதி நாடு அனல் கக்கும் பாலைவனங்கள் போல வறண்டு கிடக்கின்றன. காலநிலை மாற்றத்தின் கோர முகத்திற்கு தெற்கு சூடான் பலியாகி கொண்டிருப்பதை இவை உணர்த்துகின்றன. ஆனால் உண்மையில் காலநிலை மாற்றத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிக சொற்பமே.

குறிப்பிட்டு சொல்லும் படியான தொழில்நுட்ப வளர்ச்சிகளை கூட அனுபவிக்காத தெற்கு சூடான் மக்களின் இன்றைய கதிக்கு சர்வதேச சூழலியல் சீரழிவுகளும் ஒரு காரணமாகி இருக்கிறது. எனவே வெள்ள பாதிப்பில் இருந்தும் பட்டினி கொடுமையில் இருந்தும் தெற்கு சூடான மீட்டெடுக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகத்திற்கு இருக்கிறது.


Tags : South Sudan , Hunger, starvation...Farming fields, floods surrounding houses...South Sudan people in tears..!
× RELATED தெற்கு சூடானில் 2 மாதங்களாக கனமழை.....