இலங்கை அதிபர் மாளிகையில் சிக்கிய ரொக்கம் குறித்து முன்னாள் அதிபர் கோத்தபயவிடம் விசாரணை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையில்  சிக்கிய ரூ.1.75 கோடி ரொக்கம் குறித்து முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்தது மக்கள் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினர். ராஜபக்சே குடும்பத்தினர் அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக குற்றசாட்டு எழுந்தது.

அதிபர், பிரதமர் பதவி விலக கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியதால், அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடினர்.

அதிபர் மாளிகையில் இருந்த பொருட்களை பயன்படுத்தி மகிழ்ந்த பொதுமக்கள், அங்கிருந்த ரூ.1.78 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றிய காணொளி வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்தியது. அப்போது அதிபர் மாளிகையில் இருந்த பணம் எப்படி வந்தது, அது லஞ்சப்பணமா அல்லது வேறு காரணங்களுக்காக பெறப்பட்டதா என விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: