×

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு மாணவியின் செல்போனை ஒப்படைக்க வேண்டும்: பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது.

 இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். மேலும், 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்ஃபோனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை. அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும். உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்று வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.  மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும். செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக பெற்றோர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதை ஆய்வு செய்து அறிக்கையாக சிறப்பு புலன் விசாணை குழு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : Kallakurichi , Kallakurichi, student death case, student, cell phone, should be handed over, High Court, order to parents
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...