×

மைதானம்

நன்றி குங்குமம் தோழி

சிறுகதை

மதிய உணவு இடைவேளைக்கான மணி ஒலித்தது. ‘டிங்… டிங்…டிங்…’ அந்த நீண்ட மணிச்சத்தம் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை புத்தகப் பையை அப்படி அப்படியே போட்டுவிட்டு சத்துணவுக் கூடத்தை நோக்கி ஓடவைத்தது.விடாமல் ஒலித்துக்கொண்டிருந்த அந்த மணிச் சத்தம் மாணவர்களை மட்டுமின்றி இன்னொருவரையும் எழுப்ப அந்தப் பள்ளிக்கூட மைதானத்தைத் தாண்டி ஓடி அந்தக் குடிசையில் நாறும் தோலுமாய் சுருண்டுக்கிடந்த அந்த கிழவாரின் பஞ்சடைத்துப்போன காதுகளையும் தொட்டது.

தேவநாதமாய் விழுந்த அந்த ஒலி அவருடைய உள்ளடங்கிப்போன விழிகளை சிரமப்பட்டு திறக்க வைத்தது. காதில் விழுந்த ஒலி நேரே சுருங்கிக் கிடந்த வயிற்றில் போய் அப்படியே தஞ்சம் புகுந்துகொண்டு பெரும் புயல் காற்றாய் மாறி சுற்றி சுழன்று இரவிலிருந்து ஏதும் சாப்பிடாத பசியை கிளறி விட்டது.

எழுந்தமர எத்தனித்தார். பசி மயக்கம், பாய்ந்து வேட்டையாடும் வேங்கையின் கால்களையே தளரவைக்கும் போது பாவம் தள்ளாத கிழவார் அவர். பசியோடு வயோதிகமும் வஞ்சித்துவிட்டதால் எழ முடியாமல் தடுமாறினார். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை...’ ஒட்டு மொத்த மாணவர்களும் உரக்க கூறியது கேட்டது. சாப்பிடத் தொடங்கி விட்டனர்.

எப்படி… எப்படி … போவது? எழுந்தே நடக்க முடியாத நிலையில்? அப்பொழுது குடிசைக்கு வெளியே “தாத்தா..” என்ற குரல் அழைத்தது.அழைத்த குரலை அடையாளம் கண்டுகொண்ட தாத்தா “யாரு... மாரியா?” என்றார் குழறிய குரலில்.குடிசைக்குள் குனிந்து நுழைந்த மாரி “ஆமா..தாத்தா சோறு கொண்டாந்திருக்கேன்” என்றாள்.குப்பென்று சாம்பார் சாதத்தின் மணம் மூக்கை உரச முன்னால் நகர்ந்து வந்தார் தாத்தா. “யம்மாடி சோறாக் கொண்டு வந்தே. புண்ணியமா போச்சு. மவராசியா இரு. கொண்டா... கொண்டா…” பசி அவரை பாய்ந்து வாங்க வைத்தது.

தட்டு சுடாமலிருக்க தன் பாவாடையால் பிடித்திருந்த மாரி பார்த்து கீழே கொட்டிவிடாமல் பதவிசாய் கீழே வைத்தாள்.“நீ சாப்புட்டியாத் தாயி?” கொன்று போடும் பசியிலும் நன்றி மறவாதவராய் கேட்டார் தாத்தா.“இன்னும் இல்லத் தாத்தா. நேத்தும் நீ வரலையா? இன்னைக்கும் உன்னைக் காணலைன்னதும் சத்துணவு சாருதான் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு யாராவது போயி சோறு குடுத்துட்டு வாரிங்களான்னு கேட்டாரு. நான் குடுத்துட்டு வறேன்னு எடுத்துட்டு ஓடியாந்தேன்...” தாத்தா மேலிருக்கும் தன் தனிப்பட்ட பாசத்தை நிரூபித்துவிட்ட சந்தோஷம் மாரியின் முகத்தில்.

ஒடுங்கிப்போய்விட்ட நெஞ்சுக்குழி நெகிழ்ந்தது தாத்தாவிற்கு. ‘‘எல்லாருக்கும்தான் என் மேல எவ்வளவு பிரியம்?”மாரி தாத்தாவை பாவமாகப் பார்த்தாள்.

“ஏன் தாத்தா… இப்படி தனியா கிடக்கியே. உனக்கு யாருமே இல்லையா?”
“ஏன் இல்லாம? புள்ளைங்க, பேரன்
பேத்தியெல்லாம் இருக்காங்க.”
“எங்கே?”
“மெட்ராஸுல.”

“அவங்க கூட நீ போய் இருக்கலாமில்லை?”
“யாரு மாட்டேன்னா? என்னை அவங்க
வச்சுக்க மாட்டேங்கறாங்களே...”
“ஏன்?”
“என்னை அவங்களுக்குப் புடிக்கலை.”

“ஐய்யே… உன்னைய போய் யாருக்காவது புடிக்காம போகுமா? எவ்வளவு நல்லா கதையெல்லாம் சொல்லுவே?”தாத்தா விரக்தியாய் சிரித்தார்.“கவலைப்படாதே தாத்தா. நான் டீச்சருக்குப் படிச்சு வேலைக்குப் போய் உன்னை என்கூடவே வச்சுக்கறேன.”தாத்தா ஆமோதித்து அவளுடைய தலையை அசைத்து சிரித்தார்.

“தாத்தா சோறு நிறையவே இருக்கு. சாப்புட்டுட்டு மிச்சத்தை நல்லா மூடி ராவுக்கும் வச்சுக்க. பூனை, நாய் ஏதாவது தின்னுட்டுப் போயிடும். பார்த்துக்க. நான் போட்டா. பசிக்குது...” பெரிய மனுஷியாட்டம் அறிவுரையெல்லாம் கொடுத்துவிட்டு உத்தரவிற்காக காத்திருந்தாள்.“ போ…போ…சீக்கிரமா போய் சாப்பிடு...” அவள் சென்றதும் சாப்பிடத் தொடங்கினார். வாயே வயிறாக வயிறே வாயாக மாறி மாறி சாம்பார் சாதத்தை வாங்கிக் கொண்டது.பசி வந்தால் பத்தும் பறந்து போகும். சோறு வந்தால் சொர்க்கமே வரும். சோற்றை மிஞ்சிய சொர்க்கம் எது? உண்டு முடித்தப்பின் அவர் கண்ட சொர்க்கம் தூக்கம்.

மறுபடியும் அவர் விழித்ததும் சத்தம் கேட்டுத்தான். ஆனால் மணிச்சத்தம் கேட்டு அல்ல. மைதானத்தின் சத்தத்தால். குடிசைக்கு வெளியே ‘ஹோ’ வென்ற இரைச்சல். கூக்குரல். பெரிய சிரிப்பு. உற்சாக கைத்தட்டல். உண்ட உணவும், உறக்கமும் தெம்பைக் கொடுத்திருந்தது. கம்பைத் துழாவி எடுத்துக் கொண்டு ஊன்றி உள்ளிருந்து வெளியே வந்து மண் திண்ணையில் அமர்ந்தார். பரந்துக் கிடந்த மைதானத்தில் மாணவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் துடிப்பும் துள்ளலும் மைதானத்தின் புழுதிப் படலமும் கிழவரின் குச்சி குச்சியான கால்களுக்கு ஏதோ சக்தியைத் தருவதைப் போலிருந்தது. மைதானத்தின் ஒரு பக்கத்தில் ஆட்கள் மூங்கில் கழிகளைக் கொண்டு வந்து இறக்குவதைக் கவனித்தார்.

“தாத்தா…தண்ணீ…” நெஞ்சு இரைக்க வியர்வை வழிய வந்து நின்ற மாணவிகளை விசாரித்தார்.“என்ன…மூங்கி கழியெல்லாம் கொண்டாந்து போடறாங்க.. என்னா விசேஷம்?”
குடிசைக்குள்ளிருந்த மண்குடத்தை கொண்டு வந்து திண்ணையில் வைத்துக் கொண்டு மொண்டு மொண்டு குடித்தபடியே அவர்கள் சொன்னார்கள். “தாத்தா…நாளை மறுநாள் ஸ்போர்ட்ஸ் டே ஃபங்ஷன். எங்களுக்கு ஏகப்பட்ட ப்ரைஸ் இருக்கு...”  
“அப்படியா! பலே.. பலே..!”
“தாத்தா கெஸ்ட்டா யார் வரார் தெரியுமா?”
“யாரு?”
“ செங்குட்டுவன் ஐ.பி.எஸ்.”

“அப்படியா? எனக்குத் தெரியலையே...”
“உனக்கெப்படி தெரியும் நீதான் டி.வியே பார்க்கறதில்லையே. நியூஸ்ல அவரை அடிக்கடி காட்டுவாங்க. ஆட்டுக்கடா மாதிரி பெரிய மீசை வச்சிருப்பார். பார்த்தாலே பயமாயிருக்கும்...”
“தாத்தா... அவரு நம்ம ஊர்லதான் பத்தாங்கிளாஸ் வரை படிச்சாராம். அதனாலதான் ஃபங்ஷனுக்கு கூப்பிட்ட உடனேயே வரேன்னு சொல்லிட்டாராம்.”“என்னாது நம்ம ஊர்ல படிச்சாரா? அது யாரு எனக்குத் தெரியாம?”“தாத்தா… நீயும் ஃபங்ஷனுக்கு வா. உன் கேர்ள் ஃபிரண்டுக்கிட்ட சொல்லி வேட்டியை
துவைச்சுக்க...”

“அது யாருடா எனக்கு கேர்ள் ஃபிரண்டு?”
“அதான் மாரி சோறு கொண்டாருவாயில்லே”
“அடி செருப்பால...” கொல்லென்று சிரித்து குழந்தைகள் ஓடினர்.மனசு லேசாகி சிரித்தார் தாத்தா.

அந்த மைதானமே ஒளி வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்தது. விளையாட்டு விழா களைக் கட்டியிருந்தது. நண்டு சிண்டுகளெல்லாம் தாத்தாவை முன் வரிசையில் உட்கார்த்தி வைத்திருந்தனர். ஐ.பி.எஸ் செங்குட்டுவன் பதக்கங்கள் அலங்கரித்த காக்கி உடையில் கம்பீரமாக மேடையில் அமர்ந்திருந்தார். தன் வலுவிழந்த மூளையைக் கொண்டு செங்குட்டுவனை ஞாபகத்திற்கு கொண்டு வர முனைந்தார் தாத்தா. முடியவில்லை. வரவேற்புரை முடிந்து செங்குட்டுவனை வாழ்த்தும் உரை முடிந்து வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு செங்குட்டுவன் பரிசுகளை வழங்கினார். பின் தன் உரையைத் தொடங்கினார். கணீரென்ற அவருடைய சிம்மக் குரலுக்கு கூட்டம் நிசப்தம் காட்டியது.

‘இந்த விழாவிற்கு தலைமை ஏற்க என்னை அழைத்ததுமே நான் மறுக்காமல் ஏற்றுக்கொண்டதுக்கு காரணம் இது நான் படித்த பள்ளி என்பதால்தான். பத்தாம் வகுப்புவரை நான் இந்தப் பள்ளியிலதான் படிச்சேன். எங்கப்பா இந்த ஊர்ல போஸ்ட் மாஸ்டரா பணியிலயிருந்தார்.’‘ஓ…போஸ்ட் மாஸ்டர் தர்மலிங்கத்தோட மவனா இவரு..?’ கண்டுபிடித்துவிட்ட குஷியில் குதூகலித்தார் கிழவர்.“படிக்கிற காலத்துல நானும் உங்களை மாதிரி விளையாட்டு வீரனாயிருந்தேன். இந்தப் பள்ளிக்கூடத்துக்கு நிறைய பரிசுகளை வாங்கி குவிச்சிருக்கேன். இந்த மைதானத்தைப் பார்க்கும்போது அப்படியே நெடுஞ்சாண்கிடையா விழுந்து வணங்கனும் போலிருக்கு.

இந்த மைதானத்துல என் கால்படாத இடமே கிடையாது. பொழுது விடிஞ்சு பொழுதுபோனா நான் இந்த மைதானத்துலதான் கிடப்பேன். நாம விளையாட்டுல வெற்றிவீரனா ஆக நம்மை பயிற்றுவித்த பயிற்சியாளர் மட்டும் காரணம் இல்லை. தாயாய் நம்மை சுமந்த இந்த மைதானமும்தான். இந்த மைதானத்துக்கு பின்னே ஒரு கதையிருக்கு. அந்தக் கதை இப்போ இருக்கற ஸ்டூடன்ஸுக்குத் தெரியுமோ தெரியாதோ. அதை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன். நாங்க படிக்கும்போது இந்தப் பள்ளிக்கூடத்திற்கு விளையாட்டு மைதானமே கிடையாது. இந்த மைதானத்துக்கு சொந்தக்காரர் பத்ரகிரிங்கற ெபரியவர். இந்த இடத்துல வீடுகட்டி தோப்பும் துரவும் வச்சு வாழ ஆசைப்பட்டார்.

ஆனா… பொழுதுக்கும் இந்தப் பள்ளிக்கூடப் பசங்க இந்த இடத்துல விளையாடிக்கிட்டிருந்ததால அவர் தன்னோட ஆசையைக் கைவிட்டுட்டு வாடகை வீட்ல இருந்தார். அவரோட பிள்ளைகளெல்லாம் படிச்சு சென்னையில பெரிய பணக்காரர்களாக இருக்காங்க.

அவங்க இந்த இடத்துல சின்னதா ஒரு ஃபாக்டரி கட்டணும்னு இந்த இடத்தை அவங்க பேருக்கு எழுதிக்கொடுக்க சொன்னாங்க. ஆனா அவர் மறுத்திட்டார். அதோட மட்டும் இல்லாம பின்னால எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு இந்த இடத்தை இந்தப் பள்ளிக்கூடத்துக்கே எழுதிக்கொடுத்துட்டார். அதனால அவரோட பிள்ளைங்க கோவத்துல அவரை திரும்பிக்கூடப் பார்க்கறதில்லை. அவர் இந்த மைதானத்திலேயே ஒரு ஓரமா குடிசைப் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்து சத்துணவையே சாப்பிட்டு காலம் கழிக்கறதா கேள்விப்பட்டேன்.

இன்னைக்கு நான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியா இருக்கறதுக்கு இந்த மைதானத்துல நான் எடுத்துக்கிட்ட பயிற்சிதான் காரணம். நான் இங்க வந்தது இந்த ஃபங்ஷன்ல கலந்துக்க மட்டும்
இல்லை.  கையோட பத்ரகிரி தாத்தாவை கூட்டிக்கிட்டுப் போய் என்னோட கவனிப்புல வச்சுக்கவும்தான். இதுதான் நான் அவருக்கு செய்யற நன்றிக்கடன். பத்ரகிரி தாத்தா இந்த கூட்டத்துல இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

தயவு செய்து மேடைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்...” செங்குட்டுவன் ஐ.பி.எஸ் முடிக்கவும் கரகோஷம் வானைக் கிழிக்க தாத்தாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய பெரியவர்களை முந்திக் கொண்டு நண்டுகளும் சிண்டுகளும் தாத்தாவை அலேக்காக தூக்கிக் கொண்டுபோய் மேடையில் அமர்த்த செங்குட்டுவன் தன் கையிலிருந்த மாலையை அணிவித்து அவரை அணைத்துக்கொண்டார்.

தொகுப்பு: ஆர்.சுமதி

வாசகர் பகுதி

ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ!

நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் கொலு வைத்து அம்பிகையை வணங்குவது வழக்கம். கொலு வைக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் நம்ம வீட்டு கொலு தான் டாப்கிளாஸ்.

*சரஸ்வதி பூஜையன்று “நெல்லித் தழைகள்” வைத்துப் பூஜிப்பது மிகவும் விசேஷமாகும்.

*நவராத்திரிக்கு சுண்டல் செய்த பிறகு அதன் மேல் காராபூந்தியைத் தூவி கொடுத்தால் கரகர பூந்தியோடு சுண்டல் ஜமாய்க்கும்.

*சுண்டல் செய்து இறக்கும் சமயத்தில் வறுத்த எள்ளுப் பொடி, வறுத்துப் பொடித்த வேர்க்கடலைப் பொடி தூவி இறக்கினால் சுண்டல் மிக சுவையாக இருக்கும்.

*சின்ன உள்ளங்கை அளவு பிளாஸ்டிக்கை நான்குப் புறத்தில் துளையிட்டு நூல், சின்ன செயின் கொண்டு எடை தூக்குத் தட்டுப் போல் நூலின் மேல் புறத்தை முடிச்சுப் போடவும். அதன் நடுவே உங்களுக்குப் பிடித்த லேசான பொம்மைகளை ஒட்ட வைக்கவும். கொலுவைச் சுற்றி மாட்டினால் பார்க்க அழகாக இருக்கும்.

*நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் பார்க்க பிரகாசமாக இருக்கும்.

*நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலைக் கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

*கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரகக் கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

*நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அன்று 5 சுமங்கலிப் பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசிப் பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

*நவராத்திரியன்று10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை அம்பிகையாகக் கருதி, குமாரி பூஜை நடத்தி வந்தால் செல்வம், பூமி, செல்வச் செழுமை, சரஸ்வதிக் கடாட்சம், மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

*‘முத்தாலத்தி’ என்றொரு வகை கோலத்தை நவராத்திரி நாட்களில் போட்டால் அம்பாள் அருள் கிடைக்கும்.

*நவராத்திரி தொடர்பான சுலோக மந்திரம் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். ‘ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நமஹ’ என்பதை 108 தடவைச் சொன்னாலே போதும் உரிய பலன் கிடைக்கும்.

- என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!